பங்குச்சந்தையில் நஷ்டம்.. மகனை கொன்றுவிட்டு, மத்திய அரசு அதிகாரி எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி

கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை அண்ணாநகர் மேற்கு 18-வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வந்தவர் நவீன் கண்ணன்(வயது 38). இவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மத்திய அரசு பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் மூத்த கணக்காளராக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி நிவேதிதா(35). இவர், தெற்கு ரெயில்வேயில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் லவின் கண்ணன் (7). அங்குள்ள பள்ளியில் படித்து வந்தான். இவர்களுடன் நவீன்கண்ணனின் பெற்றோர் வசித்து வருவதாக தெரிகிறது.
நேற்று காலை 10 மணியளவில் படுக்கை அறையில் இருந்து நிவேதிதாவின் அலறல் சத்தம் கேட்டு, நவீன் கண்ணனின் பெற்றோர் ஓடிச்சென்று பார்த்தனர். அங்கு நிவேதிதா, கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் பீறிட்ட நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவர்களது பேரன் லவின் கண்ணன், படுக்கையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிப்பதையும் கண்டு கதறி அழுதனர். பின்னர் கீழ்த்தளத்தில் உள்ள ஒரு பிரபல கடையில் பணியாற்றும் 3 வாலிபர்கள் உதவியுடன் நிவேதிதாவை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது வீட்டில் நவீன் கண்ணன் இல்லை. இதுபற்றி அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் வீட்டை விட்டு வெளியேறிய நவீன் கண்ணன், வில்லிவாக்கம்-கொரட்டூர் இடையே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஏற்கனவே பேரன் இறந்து, கழுத்து அறுபட்ட நிலையில் மருமகள் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் மகனும் பலியானதை கேட்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். இது தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நவீன் கண்ணன், பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்து அதில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தனது மனைவியிடம் கூறிய அவர், மகனை கொன்றுவிட்டு இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து உள்ளனர்.
அதன்படி மகன் லவின் கண்ணன் கழுத்தை நெரித்து கொலை செய்த நவீன் கண்ணன், பின்னர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும், இதற்கிடையில் அவரது மனைவி நிவேதிதா, கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த நவீன் கண்ணன், மனைவி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றபோது பயத்தில் வீட்டை விட்டு வெளியேறி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






