தூய்மையற்ற நகரங்களில் மதுரை முதலிடம்: இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை - சீமான்

கோப்புப்படம்
கழிவுநீராலும், குப்பைகளாலும் நிரம்பி தமிழ்நாடே குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழம்பெருமை வாய்ந்த தொன்தமிழ் நகரமான மதுரை மாநகரம் இந்தியாவின் தூய்மையற்ற நகரங்களில் முதலிடம் பிடித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்து, பாண்டிய மன்னர்கள் கட்டிக்காத்த கோவில் மாநகரமாம் மதுரை திராவிட மாடல் ஆட்சியில் குப்பை நகரமாக மாறி நிற்பதுதான் வரலாற்றுப் பெருங்கொடுமை!
இந்திய ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட 'தூய்மை ஆய்வு 2025' அறிக்கையின்படி, அசுத்தமான நகரங்களில் மதுரை முதலிடத்தையும், தலைநகர் சென்னை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. சிங்கார சென்னை என்று சொல்லிச் சொல்லி 60 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நீர்நிலைகளை அழித்து, சுற்றுச்சூழலை சீர்கெடுத்து வாழத்தகுதியற்ற நகரமாகச் சென்னையை மாற்றியுள்ளது திராவிட மாடல் அரசு. வளர்ச்சி என்ற பெயரில் வடசென்னை முழுவதும் கொடுநோய்களை உண்டாக்கும் மோசமான தொழிற்கழிவுகளால் நிரம்பி வழிவது பேரவலத்தின் உச்சம்.
சென்னை மட்டுமின்றி, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து இரண்டாம் நிலை நகரங்களும் கழிவுநீராலும், குப்பைகளாலும் நிரம்பி தமிழ்நாடே குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. திராவிடக் கட்சிகள் 60 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டை ஆண்ட பிறகும் கழிவுநீரை அகற்ற முறையான திட்டங்கள் ஏற்படுத்தப்படவில்லை. மக்கள் பயன்படுத்தும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் எதுவும் தீட்டப்படவில்லை. நீர்நிலைகளில் கலக்கும் தொழிற்சாலை கழிவுநீரை திராவிட அரசுகளால் தடுக்க முடியவில்லை. விளைவாக தமிழ்நாட்டிலுள்ள நகரங்கள் அனைத்தும் சுகாதாரம் சீர்கெட்டு மக்களுக்குக் கொடுநோய்களை ஏற்படுத்தும் நரகங்களாக மாறிநிற்கின்றன.
குறிப்பாக, திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்படும் 700 டன் குப்பைகள் கடந்த 15 ஆண்டுகளாக பாறைக்குழிகளிலேயே கொட்டப்படுகின்றன. இதனால், பாறைக்குழிகள் நிரம்பி, நிலம், நீர், காற்று ஆகியவை அனைத்தும் முற்று முழுதாகச் சீர்கெட்டுள்ளது. பொது மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக திருப்பூர் எல்லையைக் கடந்து, ஊத்துக்குளி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்ட முயற்சித்து, அதற்கும் மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது வேறு வழியின்றி மீண்டும் பாறைக் குழிகளிலேயே கொட்டப்படுவதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்ட திமுக - அதிமுக இரு கட்சிகளும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மழைநீரை வெளியேற்றவும், கழிவுநீரைப் பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யவும், திடக்கழிவுகளை முறையாக அகற்றவும் உரிய உட்கட்டமைப்புகளைச் செய்யத் தவறியதோடு, ஆண்டுதோறும் அதற்கென ஒதுக்கப்படும் பல்லாயிரம் கோடிகளை, ஊழல் முறைகேடு செய்ததன் விளைவே, தமிழ்நாட்டு நகரப்பகுதிகள் வாழத்தகுதியற்ற நிலமாக, கழிவு தேங்கிய நகரங்கள் என இழிவைத் தாங்கி நிற்பதற்கு முதன்மைக் காரணமாகும்.
ஆகவே, திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்படும் 700 டன் குப்பைகளை மக்களுக்கு இடையூறு இல்லாது பாதுகாப்பாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இனியேனும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, கழிவுநீர், குப்பைகள், மழைநீர் தேக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் மக்களின் நல்வாழ்வினை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






