மேகதாது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் - தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


மேகதாது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் - தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

கோப்புப்படம் 

காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வலுவான வாதங்களை வைத்து மேகதாது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டிற்கு வரும் உபரி நீரைத் தடுக்கும் நோக்கிலும், காவிரி நீரை கர்நாடக மாநிலத்திற்குள் தேக்கி வைக்கும் பொருட்டும் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு பல ஆண்டுகளாக முயற்சி எடுத்து வந்த நிலையில், அதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் சமர்ப்பித்தது.

மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் வல்லுநர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு அதில் ஒரு முடிவு எடுத்தால்தான் இந்தத் திட்டம் முன்னுக்குச் செல்லும் என்று தெரிவித்து, தமிழ்நாடு அரசின் மனுவை அண்மையில் தள்ளுபடி செய்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடகம் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர மறுப்பதையும், மேகதாது அணை கட்டப்பட்டால் வருகின்ற உபரி நீரும் நின்றுவிடும் என்பதையும் சுப்ரீம் கோர்ட்டில் அழுத்தம் திருத்தமாக தமிழ்நாடு அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டு இருந்தால் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பினை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருக்கும். அதைச் செய்ய தமிழ்நாடு அரசு தவறிவிட்டது.

இந்தச் சூழ்நிலையில், அடுத்த மாதம் எட்டாம் தேதி புது டெல்லியில் கூட இருக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதம் நடக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்தக் கூட்டத்திலாவது தமிழ்நாடு அரசின் சார்பில் வலுவான வாதங்கள் எடுத்து வைக்கப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டுத் தீர்ப்புப்படி, மாதாந்திர அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவை கர்நாடக அரசு மறுத்து வருவது குறித்த புள்ளி விவரங்களையும், உபரி நீரை மட்டுமே திறந்து விட்டதற்கான புள்ளி விவரங்களையும், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் என்பதற்கான வலுவான ஆதாரங்களையும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவித்து, மேகதாது பிரச்சனைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

விவசாயிகளின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு தொடர்புடைய அதிகாரிகளை அழைத்துப் பேசி, தமிழ்நாடு அரசின் சார்பில் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக வலுவான வாதங்களை எடுத்து வைக்கவும், இந்தப் பிரச்சனைக்கு அன்றையக் கூட்டத்திலேயே ஒரு தீர்வு காணவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story