பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரெயிலில் ரூ.48.33 கோடியில் பாதுகாப்பு அமைப்பு

பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரெயிலில் ரூ.48.33 கோடியில் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மெட்ரோ ரெயில்களின் அனைத்து பெட்டி கதவுகளிலும் "கதவில் சிக்கிக் கொண்டு இழுத்துச்செல்வதைத் தடுக்கும் பயணிகள் பாதுகாப்பு" அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், முதல் கட்டத்தில் இயங்கும் 52 மெட்ரோ ரெயில்களின் அனைத்து பெட்டி கதவுகளிலும் "Anti Drag Feature" நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திற்கு ரூ.48.33 கோடி (ஜிஎஸ்டி உட்பட) மதிப்பில் வழங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர், மனோஜ் கோயல் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் ராஜேந்திரன் மற்றும் தனியார் நிறுவனத்தின் இயக்குநர் புனீத் மெஹ்ரோத்ரா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், சிறந்த சேவை வழங்கும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, நீல வழித்தடம் மற்றும் பச்சை வழித்தடங்களில் இயங்கும் மெட்ரோ ரெயில்களின் அனைத்து பெட்டி கதவுகளிலும் 'Anti Drag Passenger Door Safety System' எனப்படும், "கதவில் சிக்கிக்கொண்டு இழுத்துச் செல்வதைத் தடுக்கும் பயணிகள் பாதுகாப்பு அமைப்பிற்கான" வடிவமைப்பு, பொருட்கள் வழங்குதல், நிறுவுதல், சோதனை செய்தல், செயல்பாட்டிற்கு கொண்டு வருதல் போன்றவை இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.

தற்போது, மெட்ரோ ரெயில்களின் கதவு அமைப்புகள் தானியங்கி கதவுகளைக் (Automatic sliding doors) கொண்டுள்ளன, இவை தடைகளைக் கண்டறியும் அமைப்புடன் (Obstacle detection system) இணைக்கப்பட்டுள்ளன. பயணிகள் ஏறி முடித்தவுடன், நிலையங்களில் கதவுகள் மூடும்போது, கதவுகளுக்கு இடையூறாக இருக்கக்கூடிய பொருட்களை இந்த அமைப்பு கண்டறியும்.

பயணிகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, Anti-Drag System உடன் கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத்தை நிறுவ உள்ளது. இதன் மூலம், மெட்ரோ ரெயிலில் இருந்து இறங்கும்போது தவறுதலாக கதவுகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ளக்கூடிய சேலைகள், பெல்ட்கள், பைபட்டைகள், பாட்டில் பட்டைகள் போன்ற மெல்லிய பொருட்களையும் கண்டறிய முடியும்.

இந்த புதிய அமைப்பின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது இழுத்துச் செல்லும் (pull and drag force) விசையைக் கண்டறியும் திறன் கொண்டது. ஒரு நபர் அல்லது பொருள் கதவில் சிக்கிக் கொண்ட நிலையில் மெட்ரோ ரெயில் நகரத் தொடங்கும்போது அது இழுக்கப்பட்டால், இந்த அமைப்பு அதைக்கண்டறியும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது, மெட்ரோ ரெயில் தானாகவே அதன் அவசரகால பிரேக்கை (emergency brake) போட்டு, மெட்ரோ ரெயிலை உடனடியாக நிறுத்திவிடும். அதுமட்டுமின்றி, இது உடனடியாக மெட்ரோ ரெயில் ஓட்டுநரின் பார்வைக்கு அனுப்பப்படும். இதன் மூலம் ஓட்டுநர் விரைவாகவும் உடனடியாகவும் நடவடிக்கை எடுக்க முடியும்.

சென்னை மெட்ரோ ரெயில்களில் இதுவரை கதவில் யாரும் சிக்கியதால் விபத்துகள் எதுவும் நடக்கவில்லை. இருந்த போதிலும், இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு ஆகும். இதன் மூலம், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்து, அனைத்துப் பயணிகளுக்கும் உயர்ந்த தரமான பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்கிறது.

இந்த வசதியானது, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டத் திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்படும் மெட்ரோ ரெயில்கள் அனைத்திலும் ஒரு நிலையான அம்சமாக இணைக்கப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது அமைப்புகளைத் தரம் உயர்த்துவதிலும், பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்வதிலும் தொடர்ந்து உறுதியுடன் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com