தகுதியான வாக்காளர் பெயர் விடுபட்டுவிடக்கூடாது: நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

யார் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். களம் நம்முடையதுதான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வதற்கு ஆரம்பம் முதலே தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்ப்புகள் இருந்தபோதிலும் தேர்தல் கமிஷன் சிறப்பு திருத்த பணியை தொடங்கியது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடர்பாக திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க ஆட்சி அமைத்திடக் கூடாது என்பதற்காக பல்வேறு திட்டமிடல்களைச் பா.ஜ.க செய்து வருகிறது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் என்ற எந்தவொரு நிறுவனத்தையும் நமக்கு எதிராக பயன்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். யார் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். களம் நம்முடையதுதான்.
நான் விசாரித்த வரையில் பொதுமக்களிடம் எஸ்.ஐ.ஆர். குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பல இடங்களில் BLOக்கள் எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கே புரியவில்லை என சொல்கிறார்கள். தகுதியான வாக்காளர் ஒருவர் பெயர் கூட வரவிருக்கும் வாக்காளர் பெயர் பட்டியலில் விடுபட்டு போய்விடக் கூடாது. அதே போல எந்தவொரு தகுதி இல்லாத வாக்காளரையும் பட்டியலில் இணைத்துவிட கூடாது. எஸ்.ஐ.ஆர். பணிகளில் மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






