பட்டினப்பாக்கம் கடற்கரையில் மலைபோல் நுரை - காரணம் என்ன?

கழிவுநீரை சுத்திகரித்து கடலில் விட வேண்டும். ஆனால், அரசாங்கம் அப்படியே விட்டுவிடுகிறது என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நீர்மட்டத்தில் உச்சம் தொட்ட செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூவம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், கூவம் ஆற்றில் ஆங்காங்கே பல மாதங்களாக தேங்கிக் கிடந்த ரசாயன கழிவுகளும் அடித்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலந்து வருகிறது. இதனால், மலைபோல் வெண் நுரைகள் உருவாகி பட்டினப்பாக்கம் முதல் சீனிவாசபுரம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரையோரம் படர்ந்துள்ளது.
சிறு குழந்தைகளுக்கு வேண்டுமானால் இது பார்ப்பதற்கு ஆச்சரியமாக தெரிந்தாலும், இந்த நச்சு நுரை அப்பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் வெகுவாக பாதிக்கிறது.
இதுகுறித்து அங்குள்ள மீனவர்கள் கூறும்போது,
"ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் எங்களுக்கு இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. கழிவுநீரை சுத்திகரித்து கடலில் விட வேண்டும். ஆனால், அரசாங்கம் அப்படியே விட்டுவிடுகிறது. இதனால், மீன்கள் வளர்ச்சி பாதிக்கப்படும்" என்றனர்
.






