மதுரையில் இருந்து இன்று பிரசார பயணம் தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன்

முக்கிய கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர உள்ளன என ஸ்ரீவில்லிபுத்தூரில் நயினார் நாகேந்திரன் கூறினார்.
‘தமிழகம் தலைநிமிர’ என்ற முழக்கத்துடன் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இ்ன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது பிரசார பயணத்தை மதுரையில் இருந்து தொடங்குகிறார். இதற்கான தொடக்க விழா, அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பு பகுதியில் மாலையில் நடக்கிறது. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், பா.ஜனதா நிர்வாகிகள், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நயினார் நாகேந்திரன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பா.ஜனதா சார்பில் மதுரையில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறோம். இதையொட்டி ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தேன்.
வருகிற தேர்தலின் மூலம் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. எங்கள் கூட்டணியில் முக்கிய கட்சிகள் இணைய உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.






