நெல்லை: ஊட்டச்சத்து மாத்திரையை போட்டி போட்டு சாப்பிட்ட 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி


நெல்லை: ஊட்டச்சத்து மாத்திரையை போட்டி போட்டு சாப்பிட்ட 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
x

2 மாணவர்கள் உயர்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழபத்தை அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில, சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவத்துறை சார்பில் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

அவ்வாறு வழங்கப்பட்ட மாத்திரைகளை அந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் சந்துரு, நந்தபெருமாள், நரேஷ் மற்றும் வெற்றிமதன் ஆகிய 4 மாணவர்கள், யார் அதிக மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள் என போட்டி போட்டுக் கொண்டு விளையாட்டாக சாப்பிட்டுள்ளனர். அதன்படி சந்துரு 15 மாத்திரைகளையும், நந்தபெருமாள் 7 மாத்திரைகளையும், வெற்றிமதன் 4 மாத்திரைகளையும், நரேஷ் 3 மாத்திரைகளையும் சாப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், வீட்டிற்குச் சென்ற மாணவர்களுக்கு வயிற்று வலி உள்ளிட்ட உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டன. சத்து மாத்திரைகளை சாப்பிட்டது குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறிய நிலையில், உடனடியாக 4 மாணவர்களையும் அவர்களின் பெற்றோர் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சந்துரு மற்றும் நந்தபெருமாள் ஆகிய இருவரும் உயர்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நரேஷ் மற்றும் வெற்றிமதன் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story