நெல்லை: பெயிண்டு அடிக்க சென்ற வீட்டில் கைவரிசை - 6½ பவுன் நகை திருட்டு

நகை வைத்து இருந்த கைப்பையை நோட்டமிட்ட நடராஜன் நைசாக அந்த பையில் இருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை திருடி உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 50). இவர்களின் சொந்த ஊர், நெல்லை சந்திப்பு உடையார்பட்டி. இங்கு இவர்களுக்கு சொந்தமான 100 ஆண்டுகள் பழமையான வீடு உள்ளது. இந்த வீட்டை சீரமைக்க முடிவு செய்த தம்பதியினர் அதற்கான ஆட்களை நியமித்து வீட்டு வேலை நடந்து வருகிறது.
இந்த வீட்டுக்கு வர்ணம் பூசும் பணியில் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் நடராஜன் (56) உள்ளிட்ட சிலர் ஈடுபட்டு வந்தனர். இந்த பணிகளை தம்பதியர் பார்வையிட்டு வந்தனர். நேற்று முன்தினம் மதியம் கிருஷ்ணவேணி தனது கைப்பையில் தங்க நகைகளை வைத்து இருந்தார். இதனை நோட்டமிட்ட நடராஜன் நைசாக அந்த பையில் இருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை திருடி உள்ளார்.
சிறிது நேரம் கழித்து கிருஷ்ணவேணி தனது கைப்பையை பார்த்த போது நகை மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சந்திப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் நடராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகையை மீட்டனர்.






