1439 சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை இல்லை - அன்புமணி குற்றச்சாட்டு

பல்லாயிரம் கோடி கனிமக் கொள்ளைக்கு துணை போன திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டில் தொடங்கி 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 1439 கனிமவளக் குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அதேநேரத்தில் கனிமக்கொள்ளையில் ஈடுபட்டவர்கள் எந்த வகையிலும் தண்டிக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. கனிமக் கொள்ளையர்களை திமுக அரசு பாதுகாப்பது கண்டிக்கத்தக்கது.
சட்டவிரோத மணல் கொள்ளை மற்றும் கனிமவளக் கொள்ளைகளை தடுக்க தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது புவியியல் மற்றும் கனிம வளத்துறை ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக்கொண்டாலும் கூட, கனிமவளக் கொள்ளையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதை தங்களின் கருத்துகள் மற்றும் அரசை நோக்கி எழுப்பிய வினாக்களின் மூலம் வெளிப்படுத்தினார்கள்.
2020-ஆம் ஆண்டிலும், அதன் பின்னர் வந்த திமுக ஆட்சியிலும் 1439 கனிமவளக் குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் பதிவு செய்யப்பட்ட 135 வழக்குகளில் எத்தனை சட்டவிரோத குவாரிகள் சேர்க்கப்பட்டன என்ற விவரமோ, எத்தனை வழக்குகளில் சட்டவிரோத குவாரிகளை நடத்தியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்ற விவரமோ அரசுத் தாக்கல் செய்த அறிக்கையில் இல்லை.
இதற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்,‘‘ஒரு குவாரியில் ஐந்து கோடி ரூபாய் அளவுக்கு கனிம வளம் கொள்ளையடிக்கப்படும்பட்சத்தில் அதற்கு காரணமானவர்களுக்கு வெறும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதில் என்ன பயன் இருக்கிறது?” என்றும் வினா எழுப்பினார்கள். மேலும் கனிமவளக் கொள்ளையில் ஈடுபடும் கும்பல்கள் அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக்கொண்டு மாபியா போன்று செயல்படுவதாகவும் நீதிபதிகள் குற்றஞ்சாட்டினார்கள். இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் சரியானது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த தரவுகளும், அதற்கு நீதிபதிகள் தெரிவித்த கருத்துகளும் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளைகள் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி கடந்த காலங்களில் முன்வைத்த குற்றச்சாட்டுகளை உறுதி செய்வதாக அமைந்துள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் 1439 சட்டவிரோத கனிமவளக் குவாரிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுக்கு உண்மையாகவே இயற்கை வளங்களைக் காப்பதில் அக்கறை இருந்திருந்தால், சட்டவிரோத குவாரி நடத்திய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தந்திருக்க வேண்டும். ஆனால், திமுக அரசு அதை செய்யவில்லை.
1439 சட்டவிரோத குவாரிகள் கண்டறியப்பட்ட நிலையில் வெறும் 135 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப் பட்டிருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதையும், தண்டிக்கப்பட்டவர்களின் விவரங்களை தெரிவிக்காததையும் வைத்துப் பார்க்கும் போது, சட்டவிரோத குவாரி நடத்திவர்களின் பெரும்பான்மையினரை வழக்கே பதிவு செய்யாமலும், இன்னும் சிலரை வழக்கு பதிவு செய்த பிறகு மேல் நடவடிக்கை எடுக்காமலும் திமுக அரசு தப்பிக்க விட்டிருக்கிறது என்று தான் புரிந்து கொள்ள முடிவதாக இயற்கைவள ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதேபோல், ஒரு குவாரியில் ரூ.5 கோடி மதிப்புள்ள கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் போது அதற்கு காரணமானவர்களுக்கு வெறும் ரூ.5 லட்சம் மட்டுமே தண்டம் விதிப்பதால் யாருக்கு என்ன பயன்? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியிருக்கும் வினா, இதே விவகாரத்தில் கடந்த காலங்களில் நான் எழுப்பிய வினாக்களுடன் எவ்வாறு ஒத்துப் போகிறது என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் நடந்த கனிமவளக் கொள்ளை குறித்து 2022-ஆம் ஆண்டில் சுரங்கத்துறையின் வல்லுனர் குழு 54 குவாரிகளில் நடத்திய ஆய்வில் 53 குவாரிகளில் கனிமக் கொள்ளை நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அவற்றில் 24 குவாரிகளில் மட்டுமே 50 லட்சம் கன மீட்டருக்கும் கூடுதலான சாதாரண கற்களும், 5.5 லட்சம் கன மீட்டருக்கும் மேலான கிராவல் கற்களும் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவல்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றின் மதிப்பு ரூ.262 கோடி என மதிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து அதே தொகையை அபராதமாக விதித்து அன்றைய சுரங்கத்துறை இயக்குனர் நிர்மல்ராஜ் ஆணையிட்டார். ஆனால் அவரை இடமாற்றம் செய்த திமுக அரசு, அவருக்கு பதிலாக இன்னொரு அதிகாரியை நியமித்து அங்கு நடந்தது கொள்ளை இல்லை; சட்டப்பூர்வமாகத் தான் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகக் கூறி, ரூ.262 கோடி அபராதத்தை தள்ளுபடி செய்து விட்டு, ரூ.13.80 கோடி ராயல்டி மட்டும் வசூலித்துக் கொண்டது.
தென் மாவட்டங்களில் மட்டும் திமுக ஆட்சியில் குறைந்தது ரூ.1000 கோடிக்கு கனிமவளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவை அனைத்துக்கும் காரணமான எவரும் தண்டிக்கப்படவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட கனிமவளங்களுக்கான இழப்பீடும் பெறப்படவில்லை. இவை அனைத்துக்கும் மேலாக தென் மாவட்டங்களில் கனிமவளக் கொள்ளைக்கு காட்பாதராக இருப்பவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அரசிலும், அரசியலிலும் பதவிகளை வழங்கி திமுக ஊக்குவிக்கிறது. இதிலிருந்தே கனிமக் கொள்ளையர்களுக்கு ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு துணையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள் என்பதை உணர முடியும்.
நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கனிமவளக் குவாரிகளால் சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவதற்காக கடந்த நவம்பர் 2-ஆம் தேதி நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், பி.யு.சி.எல் அமைப்பின் பொதுச்செயலாளருமான வி.சுரேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கனிமவளக் கொள்ளையர்கள் மாபியாக்களைப் போல செயல்படுகிறார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
எந்த வகையில் பார்த்தாலும் தமிழ்நாட்டில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, அவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. இயற்கையை அழித்து கனிமவளக் கொள்ளையருக்கு துணை போகும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






