எந்த கொம்பனாலும் என்னை விலைக்கு வாங்க முடியாது: திருமாவளவன்

2026ல் விசிக இல்லாமல் அரசியல் நகர்வு இல்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை,
தர்மபுரியில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
நான் ஒரு சராசரி அரசியல்வாதியாக இருந்திருந்தால், என்றோ இந்தக் கட்சிக்கு அங்கீகாரம் பெற்றிருக்கும். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது. இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை. இது காலத்தின் கட்டளை. இதை அரசியல் வல்லுனர்களே ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள்.
சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரம் பெறுகின்றனர். சினிமாவில் நன்றாக சம்பாதித்துவிட்டு சொகுசாக வாழ்ந்து அரசியலுக்கு வருகிறார்கள். அரசியலுக்கு வரும் நடிகர்கள் ஊர் ஊராய் செல்லத் தேவையில்லை என்ற சொகுசு இருக்கிறது. உடனே கட்சி தொடங்கலாம்; ஆட்சி அதிகாரத்தையும் பெறலாம். ஆனால் நான் கடந்த 35 ஆண்டுகளாக வாழ்க்கையை முழுமையாகத் துறந்து, தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல், சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடாமல், எனது இளமை முழுவதையும் இழந்து தான் இந்த இடத்தை எட்டிப் பிடிக்க முடிந்தது.
நான் 35 ஆண்டுகள் உழைத்த பிறகே விசிக அங்கீகாரம் பெற்ற கட்சியாய் மாறியிருக்கிறது. டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் போன்ற தலைவர்களின் கொள்கைப் பிடிப்பு எனக்கு இருக்கிறது. கொள்கையில் தெளிவு இருப்பதால் எந்த கொம்பனாலும் என்னை விலைக்கு வாங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.