திருமாவளவனுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது - அமைச்சர் அன்பில் மகேஸ்


திருமாவளவனுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது - அமைச்சர் அன்பில் மகேஸ்
x

கோப்புப்படம் 

தி.மு.க. கூட்டணியில் பிரிவு வந்துவிடாதா என பலர் காத்திருக்கின்றனர் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

சென்னை,

விகடன் பிரசுரம் மற்றும் வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்பதாக கூறப்பட்டது. பின்னர் விழாவில் பங்கேற்கமாட்டேன் என திருமாவளவன் தெரிவித்தார். தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் விஜய் கலந்து கொள்ளும் விழாவில் கலந்து கொள்ள நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் திருமாவளவன் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த விழாவில் பங்கேற்காததற்கான காரணத்தை திருமாவளவன் நீண்ட அறிக்கையின் மூலம் விளக்கியிருந்தார்.

இந்த நிலையில் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தினால் திருமாவளவன் பங்கேற்வில்லை எனக் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த திருமாளவன், "எனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கக்கூடிய அளவுக்கு நானும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை" என்று கூறினார்.

இந்த நிலையில் திருமாவளவனுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, "எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல இது கொள்கைக்கான கூட்டணி. இந்த கூட்டணியில் பிரிவு வந்துவிடாதா என்று பலர் காத்திருக்கின்றனர். அதற்கு நாங்கள் கண்டிப்பாக இடம் தரமாட்டோம்.

திருமாவளவன் சுயமரியாதைக்காரர்; அவருக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. திருமாவளவன் மிகப்பெரிய தலைவர். அவரை நாங்கள் மதிக்கிறோம். ஆதவ் அர்ஜுனா கருத்து குறித்து தி.மு.க. தலைவர் முடிவெடுப்பார்" என்று கூறினார்.

1 More update

Next Story