தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் வடகிழக்கு பருவமழை: அணைகள், ஏரிகள் வேகமாக நிரம்புகின்றன

கடந்த 16-ந்தேதி தொடங்கியதில் இருந்து பருவமழை பரவலாக தமிழ்நாட்டில் பெய்கிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் சராசரியாக தமிழகம் முழுவதும் 2 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. அணைகள், ஏரிகள், குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கடந்த 16-ந்தேதி தொடங்கியதில் இருந்து பருவமழை பரவலாக தமிழ்நாட்டில் பெய்கிறது. அதிலும் நேற்று பெரும்பாலான இடங்களில் மழை கொட்டியது.
நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 2 செ.மீ. சராசரியாக பெய்துள்ளது. கடந்த 1-ந்தேதி முதல் நேற்று முன்தினம் காலை 8.30 மணி வரையில் தமிழ்நாட்டில் 10.9 செ.மீ. மழை பெய்திருந்தது.
நேற்று காலையுடன் சராசரியாக பெய்த 2 செ.மீ. மழையுடன் சேர்த்து, தமிழ்நாட்டில் 12.8 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இது இயல்பான மழை அளவான 8.2 செ.மீ. விட 56 சதவீதம் அதிகம் ஆகும். அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 18 செ.மீ., கும்மிடிப்பூண்டியில் 16 செ.மீ., பொன்னேரியில் 14 செ.மீ. காயல்பட்டினம், குன்னூரில் தலா 12 செ.மீ. உள்பட 230-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பெய்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், பெரும்பாலான அணைகள், ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. சில இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், சில இடங்களில் கனமழையும் பதிவாகும் என ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதன்படி, இன்று தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
தீபாவளி பண்டிகை தினமான நாளை (திங்கட்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங் களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.






