ஈரோட்டில் குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து அரங்கேறும் நூதன மோசடி


ஈரோட்டில் குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து அரங்கேறும் நூதன மோசடி
x

ஈரோட்டில் குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து நூதன மோசடி அரங்கேறி வருகிறது.

ஈரோடு,

மருத்துவ உலகில் சமீப காலமாக, குழந்தைப்பேறுக்கு டாக்டர்களை தேடி வரும் தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள, கருத்தரிப்பு மருத்துவமனைகளை நோக்கி தம்பதி சென்று வருவது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் குழந்தைப்பேறுக்காக ஏங்கும் தம்பதியை குறிவைத்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூதன முறையில் ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அந்தியூர் அருகே உள்ள கொல்லபாளையம் பகுதிக்கு 45 வயதுடைய ஆணும், பெண்ணும் காரில் வந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் குழந்தையில்லாத தம்பதிகள் குறித்து விசாரித்து அவர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவர்களிடம், சித்த மருத்துவ முறைப்படி, குழந்தை இல்லாதவர்களுக்கு மருந்து கொடுக்கிறோம் என ஆசை வார்த்தைக்கூறி ரூ.3 ஆயிரம் மட்டும் கேட்டுள்ளனர்.

இவர்களின் பேச்சை நம்பாதவர்களும், பணம் இல்லாதவர்களும், மருந்து வேண்டாம் என கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். அதேபோல் கொல்லபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி வீட்டுக்கு சென்ற அந்த நபர்கள், சித்தா மருந்து கொடுப்பதாக கூறியுள்ளனர். அவர்களிடம் அந்த நபர்கள் சில புகைப்படங்களையும், திருவண்ணாமலையில் சித்த மருத்துவமனை உள்ளதாகவும் கூறி விசிட்டிங் கார்டையும் காண்பித்து, இந்த மருந்து மூலம் பலர் பயனடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதை உண்மை என்று நம்பிய தம்பதியை தனித்தனியாக மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். இதில் வாலிபருக்கு உயிரணுக்கள் குறைவாக இருப்பதாகவும், அவரது மனைவிக்கு கர்ப்பப்பையில் நீர் கோர்த்திருப்பதாகவும் நம்ப வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து நாங்கள் கொடுக்கும் மருந்தை 3 மாதங்கள் சாப்பிட வேண்டும் என்றும், அதற்கு ரூ.18 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் ஏதோ ஒரு மாத்திரையும் கொடுத்து இதை சாப்பிடுங்கள் என்றனர்.

தம்பதியினர் அந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் பாதி மயக்க நிலைக்கு சென்றனர். அதன்பின்னர் எந்தவித கேள்வியும் கேட்காமல், அவர்கள் கேட்ட ரூ.18 ஆயிரத்தை வாலிபர் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து அந்த கும்பல் 2 டப்பாக்களில் சித்தா மருந்து பொடி என்று கூறி கொடுத்து விட்டு சென்றுள்ளனர். சுமார் 4 மணி நேரத்துக்குப்பின் அவர்கள் தெளிவு நிலைக்கு வந்த பிறகுதான் ரூ.18 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அடுத்தநாள், விசிட்டிங் கார்டில் உள்ள முகவரியை தேடி, வாலிபர் திருவண்ணாமலைக்கு சென்றார். அங்கு சென்று அந்த நபர்களிடம் போனில் பேசியபோது, சித்தா மருத்துவமனை, அந்த வீதியில் இருக்கிறது. இந்த வீதியில் இருக்கிறது எனக்கூறி அலைக்கழித்துள்ளனர்.

ஆனால் எங்கு தேடியும் விசிட்டிங் கார்டில் உள்ள முகவரியில் சித்தா மருத்துவமனை இல்லை என்பது தெரிந்தது. அதன்பின்னர் பல முறை செல்போனில் அழைத்தும், அவர்கள் பேசவில்லை. அப்போதுதான் அவர் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘அந்தியூரில் மட்டுமல்ல, ஈரோடு மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிராமங்களில் இந்த கும்பல் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியை குறி வைத்து பணத்தை சுருட்டி வருகின்றனர். விழிப்புணர்வு இல்லாதவர்களிடம் நம்ப வைத்து பணத்தை ‘அபேஸ்' செய்கின்றனர். அவர்கள் கொடுக்கும் மாத்திரையை நாக்கில் வைத்ததும், சுய நினைவு இழந்ததை போல ஆனதும், பணத்தை சுருட்டிக்கொண்டு தப்பி செல்கிறார்கள். இதுபோன்றவர்களை நம்ப வேண்டாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’ என்றனர்.

1 More update

Next Story