அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் குறித்து பேசவில்லை - நயினார் நாகேந்திரன்

தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பேசவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
கோவை,
தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று சென்னை வந்தார். அவர் தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி, கள நிலவரம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக சுமார் ஒன்றரை மணிநேரமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில், கோவையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
இன்றைய பேச்சுவார்த்தையில் சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு எவ்வளவு வாங்கியுள்ளோம், வாக்கு சதவீதம் எவ்வளவு? என்பது குறித்து பேசினோம். தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பேசவில்லை. அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் குறித்து பேசவில்லை. பேச்சுவார்த்தையின்போது விஜய் குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளன. யார் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது பின்னர் தெரியவரும்.
பியூஷ் கோயலுடன் அரசியல் நிலவரம் குறித்து பேசினோம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. திமுக அகற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஒத்த கருத்துடையோர் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் விடியக்கூடிய அரசு வரும்.”
இவ்வாறு அவர் கூறினார்.






