எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைவாரா? - நயினார் நாகேந்திரன் பதில்

தமிழகத்தில் நிதி நிர்வாகமும் சரியில்லை, நீதி நிர்வாகமும் சரியில்லை என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
நெல்லை,
பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கையில் புத்தகம் ஏந்தும் வயதில் அரிவாள் தூக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினேன். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. பொங்கலுக்கு பிறகு எங்கள் கூட்டணியின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும்.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் பணம் வழங்குவது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டு நிதி நெருக்கடியால் தனியாரிடம் கடன் வாங்கியாவது கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க.வினர் உள்ளனர். தமிழகத்தில் நிதி நிர்வாகமும் சரியில்லை, நீதி நிர்வாகமும் சரியில்லை.
வருகிற 4-ந்தேதி உள்துறை மந்திரி அமித்ஷா திருச்சி வருகிறார். புதுக்கோட்டையில் நடைபெறும், தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணத்தில் பங்கேற்க இருக்கிறார். 5-ந்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ஓ.பன்னீர்செல்வம் இணைவாரா? என்று எனக்கு தெரியவில்லை. அது அ.தி.மு.க. விவகாரம். ஆனால் இருவரும் இணைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.






