4 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம் அதிரடி குறைப்பு.. எவ்வளவு தெரியுமா..?

கோப்புப்படம்
போக்குவரத்து ஆணையரின் எச்சரிக்கையை தொடர்ந்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
சென்னை,
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுப்பார்கள். கார் உள்ளிட்ட சொந்த வாகனங்கள் இல்லாதவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில், அரசு பஸ் மற்றும் ஆம்னி பஸ் சேவையை பயன்படுத்துவார்கள். வரும் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ஆம்னி பஸ்கள் டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. வழக்கமான கட்டணத்தை விட 4 மடங்கு உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு குளிர்சாதன படுக்கை வசதி பஸ்சில் ரூ.4,399-ம், நெல்லைக்கு ரூ.3,999-ம், தூத்துக்குடிக்கு ரூ.4,085, மதுரைக்கு ரூ.3,932, திருச்சிக்கு ரூ.3,899, கோவைக்கு ரூ.4,420, சேலத்துக்கு ரூ.4,110 என்று அதிகபட்சமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதைத்தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்தார். மேலும் பயணிகள் புகார் தெரிவிக்க மாவட்டவாரியாக செல்போன் எண்களும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் போக்குவரத்து ஆணையர் கஜலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, 4 மடங்கு உயர்த்தப்பட்ட ஆம்னி பஸ் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு 30 சதவீதம் வரையிலும், திருச்சி, கோவை, சேலம் ஆகிய ஊர்களுக்கு 50 சதவீதம் வரையிலும் கட்டணம் குறைக்கப்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து ஆம்னி பஸ்களுக்கு வெளியிடப்பட்ட கட்டண அட்டவணைப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட இருப்பதாக போக்குவரத்துத் துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






