மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதியேற்போம் - எடப்பாடி பழனிசாமி

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
' எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாள், எங்கள் தங்கத்தின் பிறந்த நாள்... சிவப்புச் சிங்கத்தின் பிறந்த நாள்... அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள்.
உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உவகை தரும் விழாவாக, எல்லோர் இதயங்களிலும், இல்லங்களிலும் எழுச்சி தரும் விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் இருந்து நீங்காமல் நிலைத்த புகழோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை தமிழ் உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
திரை உலகில் தனக்கென ஒரு தனி பாதையை அமைத்துக்கொண்டு, அதன்மூலம் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை சொந்தமாக்கிக்கொண்ட புரட்சித் தலைவர், தனது உழைப்பும், புகழும் மக்களுக்கு நல்ல கருத்துகளையும், அறநெறிகளையும் கொண்டு சேர்க்கும் வலுவான ஆயுதங்களாகப் பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். திரைப்படங்களின் மூலம், குறிப்பாக பாடல்களின் மூலம் புரட்சிகரமான சிந்தனைகளையும், சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் எடுத்துச் சொன்னதில் எம்.ஜி.ஆருக்கு நிகராக இன்னொரு மனிதரை உலகில் வேறு எங்கும் காண முடியாது.
ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காகவும், உழைப்பால் உலகை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டிருக்கும் சாமான்ய மக்களுக்காகவும், நல் உள்ளத்தோடு பாடுபடுகின்ற உயர்ந்த மனிதர்களை ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் பார்க்க முடியும். எம்.ஜி.ஆர். அத்தகைய ஒரு வரலாற்று மாமனிதர் மட்டுமல்ல, சரித்திர நாயகர்களுக்கெல்லாம் இல்லாத மேலும் பல சிறப்புகளைப் பெற்றவர் ஆவார்.
தீய சக்தியின் ஆட்சியிலே இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தை மீட்டெடுத்து ஒளியேற்றி, குடும்ப ஆட்சிக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் முடிவு கட்டி, மக்கள் ஆட்சியை உருவாக்கியதோடு, சட்டமன்றத் தேர்தலில் தொடர் வெற்றியைப் பெற்று கழகத்திற்கு பெருமை சேர்த்திட்ட மகத்தான தலைவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக, தமிழ் நாட்டிற்காக, தன்னையே அர்ப்பணித்து, தமிழர்களை தலைநிமிர வைப்பதற்கும்; அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கும் அவர் ஏந்திய ஆயுதம் தான் 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்'. அந்த ஆயுதம் தான் சில சுயநல அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்தெறிந்தது. தமிழ் இனத் துரோகிகளின் சதித் திட்டங்களை உடைத்தெறிந்தது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி ஏழை, எளியோரின் வேதனைகளைத் தீர்க்கின்ற ஆட்சி; தாய்மார்களின் இதயங்களில் இன்பங்களைச் சேர்க்கின்ற ஆட்சி; நடுத்தர மக்களுக்கு நன்மைகளைத் தருகின்ற ஆட்சி; எல்லோரும், எல்லாமும் பெறுகின்ற ஆட்சி என்ற புதிய வரலாற்றை உருவாக்கியவர் நம் புரட்சித் தலைவர். அவர் உருவாக்கிய அந்த வரலாறை தமிழ் நாட்டின் வீர வரலாறாக, எவராலும் வீழ்த்த முடியாத வெற்றி வரலாறாக மாற்றிக் காட்டியவர் புரட்சித் தலைவி அம்மா.
எம்.ஜி.ஆர். தான் சொன்னதையெல்லாம் செய்தும் காட்டிய செயல் வீரர். உலகமே போற்றும் சத்துணவுத் திட்டம்; பெண்மையைப் போற்ற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு; தலைமுறை, தலைமுறையாக பள்ளத்தில் வீழ்ந்து கிடந்த பலகோடி மக்கள் வாழ்வில் ஏற்றம்பெற, இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 69 விழுக்காடு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு; கிராமப்புறங்களில் நிலவிய அடிமைத்தனங்களுக்குக் காரணமாயிருந்த நிர்வாக முறையை முற்றிலும் ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர் (VAO) என்னும் புதுப் பதவிகள் மூலம் நிர்வாகத்தை மக்கள் கையில் கொண்டுசேர்த்த மனிதாபிமானப் பணி; கம்ப்யூட்டர் காலத்திலும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் என்றெல்லாம் எம்.ஜி.ஆர். நிகழ்த்திய சாதனைகள், வேறு யாராலும் அத்தனை எளிதாக செய்திட முடியாத அரும் பெரும் சாதனைகளாகும்.
எனவே தான், அவர் மக்கள் மனதில் புரட்சித் தலைவராகவும், பொன்மனச் செம்மலாகவும் வீற்றிருக்கிறார்.
புரட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் வழங்கிய மாபெரும் கொடையாக வந்தவர் புரட்சித் தலைவி அம்மா. புரட்சித் தலைவர் ஆட்சியின் நீட்சியாகவும், அவர் திட்டமிட்டிருந்த சமூகப் புரட்சிகளையும், வளர்ச்சிகளையும் நடைமுறைப்படுத்தும் கலைகளை அறிந்தவராகவும் சிறப்பாக ஆட்சி செய்தவர் புரட்சித் தலைவி அம்மா.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்கள் மறைந்தாலும், நம்மை வெல்ல எவராலும் இயலாது என்பதை இந்த உலகிற்கு உணர்த்திக் காட்ட வேண்டும். தமிழக மக்களுக்காகப் பாடுபடும் ஒரே இயக்கம், புரட்சித் தலைவர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான்.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், புரட்சித் தலைவரின்; புரட்சித் தலைவி அம்மாவின் பேரியக்கத்தை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
புரட்சித் தலைவர்; புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதியேற்போம்.
ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது. அந்தப் பயணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றிவாகை சூடுவோம்.
பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! புரட்சித் தலைவி அம்மாவின் புகழ் ஓங்குக!
நன்றி,வணக்கம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






