எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு: தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியதா?

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது திமுக 505 வாக்குறுதிகளை அளித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
சென்னை,
தேர்தல் ஒவ்வொரு முறை வரும்போதும் ஹீரோ யார் என்று பார்த்தால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகளுடன் வெளியிடும் தேர்தல் அறிக்கைதான். அதனால்தான், தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதுவே தேர்தலில் வாக்குகளை பெறும் துறுப்பு சீட்டாகவும் உள்ளது.
அந்த வகையில், கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது திமுக 505 வாக்குறுதிகளை அளித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. "மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை, கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். சட்டசபை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். பெட்ரோல் விலை ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும். ரேசன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்" என்பது போன்ற பல அறிவிப்புகள் அதில் இடம்பெற்றிருந்தன.
"மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை, அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச விடியல் பயணம்" போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆட்சி முடிவடையும் தருவாயில், 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக திமுக கூறிவருகிறது. ஆனால், சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியோ, "பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக மக்களை ஏமாற்றிவிட்டது. நாங்கள் கொடுத்த அழுத்தத்தால் 25 மாதங்களுக்கு பிறகு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது" என்று கூறிவருகிறார்.
மற்றொரு எதிர்க்கட்சியான பாஜகவின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனோ, தனது சமூக வலைதளப் பக்கத்தில், திமுகவின் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு "சொன்னீங்களே, செய்தீர்களா?" என்று கேள்வி எழுப்பி வருகிறார்.
இதற்கிடையே, திமுக தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை தான் நிறைவேற்றப்பட்டது என்ற கேள்வி மக்கள் மனதிலும் எழத் தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் தேர்தல் அறிக்கை தொடர்பாக திமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், "திமுக அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 அரசின் பரிசீலனையில் உள்ளன. ஆக மொத்தம் 404 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும், மத்திய அரசின் உரிய நிதி பங்களிப்புக்காக 37 திட்டங்கள் நிலுவையில் உள்ளன. 64 திட்டங்கள் அரசால் தற்போதைக்கு நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்ள முடியாதவையாக உள்ளன. பொதுமக்களே விரும்பாதது, உள்ளூர் போராட்டங்கள், தேவைப்படாத சூழல் நிலவுவது போன்ற காரணங்களால் இந்த 64 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






