5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி நம் கழக இளைஞர் அணி மட்டுமே - உதயநிதி

ஒன்று கூடுவோம்..! வென்று காட்டுவோம்..! என்று உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி நம் கழக இளைஞர் அணி மட்டுமே - உதயநிதி
Published on

சென்னை,

திருவண்ணாமலை அருகில் உள்ள மலப்பாம்பாடியில் அமைந்துள்ள கலைஞர் திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு நிகழ்ச்சி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.

வடக்கு மண்டலத்தில் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து அவர்களை சந்தித்து தேர்தல் பணி செய்வது குறித்து கட்சியின் தலைவர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களை கொண்டு ஆலோசனைகள் வழங்கிட இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இந்திய அளவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 5 லட்சம் நிர்வாகிகளைக் கொண்ட ஒரே இளைஞர் அணி நம் கழக இளைஞர் அணி மட்டுமே. 2026 தேர்தலில் மீண்டும் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே முதல்-அமைச்சர் ஆவார். திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும் என்பதை உறுதிசெய்யும் வகையில் திருவண்ணாமலையில் எழுச்சியுடன் நடக்கவிருக்கிறது 'வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு.

ஒன்று கூடுவோம்! வென்று காட்டுவோம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com