ராமேசுவரத்தில் புதிய பாம்பன் ரெயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ராமேசுவரம் - தாம்பரம் இடையேயான பாம்பன் எக்ஸ்பிரஸ் புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
Live Updates
- 6 April 2025 3:18 PM IST
தமிழகத்திற்கு ரூ.8300 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
என் அன்பு தமிழ் சொந்தங்களே, இன்று ராமநவமி, இது ஒரு பவித்திரமான நாள். தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் என்ற இந்த புண்ணிய பூமியிலிருந்து இந்திய மக்கள் அனைவருக்கும் ராம நவமி தின வாழ்த்துகள்.ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்ததை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். ஆன்மீகமும், அறிவியலும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பதற்கு அப்துல் கலாம் வாழ்க்கை ஒரு உதாரணம். தமிழகத்தின் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று என்றார்.
- 6 April 2025 2:37 PM IST
ராமேசுவரத்தில் நடைபெற்றும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு ராமரின் பட்டாபிஷேக ஓவியத்தை மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வழங்கினார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திருவள்ளுவர் உருவச்சிலையை பிரதமர் மோடிக்கு வழங்கினார்
- 6 April 2025 2:14 PM IST
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்துவைத்த பின், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி.
- 6 April 2025 1:04 PM IST
ராமேசுவரத்தில் புதிய பாம்பன் ரெயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனித் தீவாக இருந்த ராமேசுவரத்தை மண்டபத்துடன் இணைக்கும் வகையில் 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாம்பன் பகுதியில் 2,050 மீட்டர் நீளத்தில் கடலுக்கு மத்தியில் ரெயில் பாலம் கட்டப்பட்டது.
இந்தியாவில் கடல் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் ரெயில்வே பாலம் என்ற சிறப்பை பெற்ற பாம்பன் பாலம் நூற்றாண்டுகளை கடந்த நிலையில், தன்னுடைய உறுதித்தன்மையை படிப்படியாக இழக்கத் தொடங்கியது.
இந்த சூழலில், ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. இந்தப் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தன. அதனைத் தொடர்ந்து, ரெயில்கள் இயக்கிப் பார்த்து சோதனை மேற்கொள்ளப்பட்டு தற்போது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்தார். அவரது வருகையையொட்டி, ராமேசுவரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக விழாவில் பங்கேற்பதற்காக, இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திரமோடி மண்டபம் வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் பாம்பன் பாலத்தில் மையப்பகுதியில் போடப்பட்டுள்ள மேடைக்கு வந்தார். அப்போது அவர் தமிழக பாராம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார்.
பின்னர் மேடையில் இருந்து புதிய ரெயில் பாலத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதனைத் தொடர்ந்து, பாம்பனில் இருந்து ராமேசுவரத்துக்கு ரெயில்வே பணியாளர்கள், பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு முதல் ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தில் சென்றது.
தொடர்ந்து, தூக்குப்பாலம் மேல்நோக்கி உயர்ந்து செல்ல கடலோர காவல் படையின் ரோந்து கப்பல்கள் ரெயில் பாலத்தை கடந்து செல்ல இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து கடலோர காவல் படையின் கண்காணிப்பு டிரோன்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- 6 April 2025 12:17 PM IST
ராமேஸ்வரம்: மண்டபம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
இலங்கையில் இருந்து இந்திய விமானபடையின் MI 17 ரக ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்த பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி எல்.முருகன், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றனர்.
மேலும் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி, எம்.பி. ஜி.கே.வாசன், பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி, ஹெச்.ராசா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், ராமநாதபுரம் கலெக்டர் உள்ளிட்டோரும் வரவேற்றார்கள்.
- 6 April 2025 10:57 AM IST
இலங்கையில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் இலங்கை சென்றார். தலைநகர் கொழும்புவில் அந்த நாட்டு அதிபர் அனுரா குமார திசநாயகாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
குறிப்பாக இரு தலைவர்களும் உயர்மட்டக்குழுவினருடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்தியா சார்பில் பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு துறைகளில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியும், திசநாயகாவும் விவாதித்தனர்.
இந்நிலையில் இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டார். இதன்படி இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வர உள்ளார்.
- 6 April 2025 10:52 AM IST
பாம்பன் ரெயில் பாலம் திறப்பு: பிரதமர் மோடி இன்று ராமேசுவரம் வருகை
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனித் தீவாக இருந்த ராமேசுவரத்தை மண்டபத்துடன் இணைக்கும் வகையில் 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாம்பன் பகுதியில் 2,050 மீட்டர் நீளத்தில் கடலுக்கு மத்தியில் ரெயில் பாலம் கட்டப்பட்டது. இந்தியாவில் கடல் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் ரெயில்வே பாலம் என்ற சிறப்பை பெற்ற பாம்பன் பாலம் நூற்றாண்டுகளை கடந்த நிலையில், தன்னுடைய உறுதித்தன்மையை படிப்படியாக இழக்கத் தொடங்கியது.
இந்த நிலையில், ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. இந்தப் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தன. அதனைத் தொடர்ந்து, ரெயில்கள் இயக்கிப் பார்த்து சோதனை மேற்கொள்ளப்பட்டு தற்போது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் பாலத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு திறந்து வைக்கிறார். அவரது வருகையையொட்டி, ராமேசுவரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.விழாவில் பங்கேற்பதற்காக, இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திரமோடி மண்டபம் வருகிறார்.
காலை 11.45 மணிக்கு அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் பாம்பன் பாலத்தில் மையப்பகுதியில் போடப்பட்டுள்ள மேடைக்கு வருகிறார். அங்கிருந்து புதிய ரெயில் பாலத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதனைத் தொடர்ந்து, பாம்பனில் இருந்து ராமேசுவரத்துக்கு ரெயில்வே பணியாளர்கள், பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு முதல் ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தில் செல்ல இருக்கின்றது. தொடர்ந்து, தூக்குப்பாலம் மேல்நோக்கி உயர்ந்து செல்ல கடலோர காவல் படையின் ரோந்து கப்பல்கள் ரெயில் பாலத்தை கடந்து செல்ல இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து கடலோர காவல் படையின் கண்காணிப்பு டிரோன்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவை அனைத்தையும் பார்வையிடும் பிரதமர் நரேந்திரமோடி, பகல் 12.25 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு ராமேசுவரம் கோவிலுக்கு செல்கிறார்.
ராமநவமி நாளில் அங்கு வரும் அவருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட இருக்கிறது. ராமநாத சுவாமியையும், பர்வதவர்த்தினி அம்மனையும் வழிபடும் பிரதமர் நரேந்திரமோடி, சாமி தரிசனத்தை முடித்துவிட்டு மதியம் 1.20 மணிக்கு அங்கிருந்து காரில் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு ரோடு ஷோ மூலம் அழைத்துவரப்படுகிறார். விழாவில் சிறப்புரை ஆற்றும் பிரதமர் நரேந்திரமோடி, ராமேசுவரம் - தாம்பரம் இடையேயான பாம்பன் எக்ஸ்பிரஸ் புதிய ரெயில் சேவையை தொடங்கிவைக்கிறார்.
மேலும், ரூ.7,750 கோடி மதிப்பீட்டில் வாலாஜாபேட்டை - ராணிப்பேட்டை, விழுப்புரம் - புதுச்சேரி, பூண்டியன்குப்பம் - சட்டநாதபுரம், சோழபுரம் - தஞ்சாவூர் பகுதிகளுக்கான 4 வழிச்சாலை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சுமார் 1 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதியம் 2.45 மணிக்கு காரில் மண்டபம் புறப்படும் பிரதமர் நரேந்திரமோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.














