பிரதமர் வருகை: கோவையில் 19-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை

கோவையில் புதன்கிழமை நடைபெறும் இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
பிரதமர் வருகை: கோவையில் 19-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை
Published on

கோவை,

கோவை கொடிசியா வளாகத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அன்று காலை விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர் கொடிசியா வளாகத்துக்கு சென்று மாநாட்டில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்புகிறார். பிரதமர் கோவை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் இன்று முதல் 19-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

மேதகு இந்தியப் பிரதமர் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகைப்புரிவதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணம் கருதி கோயம்புத்தூர் மாவட்டத்தில், மாநகர எல்லைக்குட்பட்ட ஏற்கனவே உள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுடன் சிங்காநல்லூர், SIHS காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி பகுதிகள், கொடிசியா வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளான சிட்ரா, பீளமேடு, சரவணம்பட்டி, லட்சுமி மில்ஸ், இராமநாதபுரம், பந்தயசாலை ஆகிய பகுதிகள் மற்றும் மிக முக்கிய விருந்தினர் பயணிக்கும் சாலைகள் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டலப்பகுதிகளாக கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் அவர்களின் செயல்முறைகளின் படி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பகுதிகளில் 17.11.2025 அன்று இரவு 07.00 மணி முதல் 19.11.2025 இரவு 07.00 மணி வரையில் ஆளில்லா விமானங்கள் இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு ஆளில்லா விமானங்கள் விமானங்கள் (டிரோன்கள்), பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேற்கண்ட பகுதிகளில் 17.11.2025 அன்று இரவு 07.00 மணி முதல் 19.11.2025 இரவு 07.00 மணி வரையில் தடைசெய்யப்பட்ட கால அளவில் தடையினை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகளை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com