கோவை பாலியல் வழக்கில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து காவல் ஆணையர் விளக்கம்


கோவை பாலியல் வழக்கில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து காவல் ஆணையர் விளக்கம்
x
தினத்தந்தி 4 Nov 2025 10:58 AM IST (Updated: 4 Nov 2025 11:47 AM IST)
t-max-icont-min-icon

அவசர காலங்களில் காவலன் மொபைல் செயலியை பயன்படுத்த வேண்டுமென காவல் ஆணையர் தெரிவித்தார்.

கோவை,

கோவை பாலியல் வழக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது;

கோவை விமான நிலைய சுவருக்கு பின்னால் இந்த சம்பவம் நடந்துள்ளது. கார் கண்ணாடியை உடைத்து, ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 3 பேரும் மது அருந்திவிட்டு இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமை சம்பவம் திட்டமிட்டு நடந்ததாக தெரியவில்லை.

பாலியல் வழக்கில் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடினோம். சில ரகசிய தகவலில் அடிப்படையில் மூன்று குற்றவாளிகளையும் அடையாளம் கண்டோம். பொதுமக்கள் வைத்த பல சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. வழக்கில் 300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 3 பேரையும் அடையாளம் கண்டோம். நேற்றிரவு சுமார் 11 மணி அளவில் குற்றவாளிகள் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சதீஷ், கார்த்தி ஆகியோர் சகோதரர்கள். குணா என்பவர் அவர்களது உறவினர். மூவர் மீதும் கொலை வழக்கு உள்ளது. மூவரும் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் கிடையாது. மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசர காலங்களில் காவலன் மொபைல் செயலியை பயன்படுத்த வேண்டும். குற்ற சம்பவம் குறித்து தகவல் சொல்ல கூட நேரமில்லாத நேரங்களில், காவலன் செயலியில் உள்ள SOS பட்டனை அழுத்தினால் சம்பவ இடத்தை காவல்துறை எளிதாக கண்டறிய முடியும். சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துகளை பரப்ப வேண்டாம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story