சென்னையின் பிரதான சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை


சென்னையின் பிரதான சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை
x

வாகன ஓட்டிகளின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும் காவல்துறையினர் பதிவு செய்து வருகின்றனர்.

சென்னை,

குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாலை நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னையின் பிரதான சாலைகளில் இன்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெரினா காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.

குறிப்பாக மாலை நேரங்களிலும், இரவு நேரங்களில் பைக் ரேசிங்கில் ஈடுபடுவோர் காரணமாக விபத்துகள் மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், அதனை தடுக்கும் விதமாகவும் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் பிரதான சாலைகளில் ஆங்காங்கே தடுப்பு வேலிகளை அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையின்போது நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள், அதிவேகமாக சென்ற வாகனங்கள் உள்ளிட்டவற்றை தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் இந்த சோதனை நடைபெறுகிறது. இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் என அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

வாகன ஓட்டிகளின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும் காவல்துறையினர் பதிவு செய்து வருகின்றனர். உரிய விசாரணை மற்றும் சோதனைக்கு பிறகே வாகனங்கள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன. குற்ற சம்பவங்களை தடுக்கவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்டறியவும் இந்த எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story