விசிக இல்லாமல் அரசியல் காய் நகர்த்த முடியாது - திருமாவளவன்

கவர்னரின் மாயாஜாலப் பேச்சுக்கு தமிழக மக்கள் இணங்க மாட்டார்கள் என திருமாவளவன் கூறினார்.
திருச்சி,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
தமிழகத்தில் இளைஞர்களுக்கு மும்மொழி தேவை என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறுகிறார். ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவே தமிழக கவர்னர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பல மொழிகள் பேசுகின்றவர்கள் வாழ்கின்றோம். அதிலே ஒன்றுதான் இந்தி. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைக் கட்டாயப்படுத்தி இந்தி கற்க வேண்டும் என்று சொல்வது அவர்களின் ஆதிக்கப் போக்கை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள். ஆர்.என்.ரவி போன்றவர்களின் மாயாஜாலப் பேச்சுக்கு அவர்கள் இணங்க மாட்டார்கள்.
தேர்தல் பணியை தீவிரமாக செயல்படுத்த வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும், களமிறங்கி பணியாற்ற வேண்டும் என ஊக்கப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இயக்க தோழர்களை இயக்குவது, அணி திரட்டுவது என்னும் பொருளில் விடுதலை சிறுத்தைகள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளோம். எனவே விடுதலை சிறுத்தைகள் இல்லாமல் அரசியல் காய் நகர்த்த முடியாது என்ற நம்பிக்கை இருக்கிறது."
இவ்வாறு அவர் கூறினார்.