பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பதவி - மு.க.ஸ்டாலின் உத்தரவு


பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பதவி - மு.க.ஸ்டாலின் உத்தரவு
x
தினத்தந்தி 4 Nov 2025 2:57 PM IST (Updated: 4 Nov 2025 4:50 PM IST)
t-max-icont-min-icon

திமுகவில் ஏற்கனவே 5 துணைப்பொதுசெயலாளர்கள் உள்ள நிலையில் தற்போது 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியை திமுக தொடங்கி உள்ளது. அந்த வகையில் தான் திமுகவில் துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.

இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதாவது திமுகவில் தற்போது துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. இதனை 7 ஆக உயர்த்தும் நோக்கில் ஸ்டாலின் ஆலோசித்தார். திமுகவில் தற்போது உள்ள 5 துணை பொதுச்செயலாளர்களின் பதவிகளும் நிரம்பி விட்டன. கனிமொழி எம்.பி., அமைச்சர் ஐ.பெரியசாமி , திருச்சி சிவா எம்பி., ஆ.ராசா எம்பி. அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் இந்த பொறுப்புகளில் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுடன் கூடுதலாக மேலும் 2 பேருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி புதிய துணை பொதுச்செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் தற்போதைய அமைச்சர் சாமிநாதன் ஆகியோரை நியமனம் செய்து உத்தரவிட்டார்.

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் கண்டிப்பாக திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் மு.க. ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இதனால் தான் திமுகவின் துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக தலைமைக் கழக பதவி நியமன அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி,

முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் ஆகிய இருவருக்கும் தற்போது திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது துணைப் பொதுச் செயலாளராக சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்து வந்த திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக இல.பத்மநாபன் நியமிக்கப்படுகிறார். திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக கே.ஈஸ்வரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்ததாக, வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு என்று இரண்டு மாவட்டக் கழகங்களாக திமுக பிரித்துள்ளது. இதையடுத்து வேலூர் தெற்கு (வேலூர் அணைக்கட்டு, குடியாத்தம்) மாவட்ட செயலாளராக ஏ.பி.நந்தக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் வடக்கு (காட்பாடி, கீழ்வைத்தியாணான்குப்பம்) மாவட்ட செயலாலராக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நியமிக்கப்படுகிறார்.

1 More update

Next Story