சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்: விஜய்யின் 'மாஸ்டர் பிளான்' எடுபடுமா..?

சுயநல அரசியல் லாபங்களுக்காக பா.ஜ.க.வுடன் கூடிக்குலாவி கூட்டணிக்கு செல்ல நாங்கள் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ இல்லை என்று விஜய் தெரிவித்திருந்தார்.
சென்னை,
திரை உலகில் உச்ச நடிகராக கொடிகட்டி பறக்கும்போதே, அரசியல் அவதாரம் எடுத்து புதிய கட்சி கொடியை கையில் ஏந்தியவர், நடிகர் விஜய். 2024-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்ததுடன், கொள்கை - கோட்பாடுகளையும் அவர் வெளியிட்டார்.
தொடர்ந்து, அரசியலில் வேகம் காட்டிய விஜய், தேர்தலை சந்திப்பதில் ஆர்வம் காட்டாமல் வேகத்தை குறைத்துக்கொண்டார். கட்சியை பலப்படுத்திய பிறகே தேர்தல் களம் என்பதில் உறுதியாக இருந்த அவர், கட்சி தொடங்கி 3 மாதத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்று அறிவித்துவிட்டார். அதே நேரத்தில், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலே தங்கள் இலக்கு என்பதையும் வெளிப்படையாக அறிவித்தார்.
இந்த நிலையில்தான், 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டினை பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே வெற்றிகரமாக நடத்தி காட்டினார். அந்த மாநாட்டில், அரசியல் எதிரி, கொள்கை எதிரி பற்றி பேசிய விஜய், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்குதரப்படும் என்று சிவப்பு கம்பளம் விரித்து அழைப்பு விடுத்தார்.
தமிழக அரசியலில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் தி.மு.க. - அ.தி.மு.க., தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு எப்போதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தந்ததில்லை என்ற நிலையே இருக்கிறது. இதனால், விஜய்யின் இந்த புதிய அறிவிப்பு, இரு கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களை யோசிக்க வைத்தது. இது தி.மு.க. - அ.தி.மு.க. தலைமைக்கும் கிலியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு பல்வேறு நிலைகளில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை பணியும் தொடங்கியது. தற்போதைய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் 1½ கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பெரிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வில் கூட உறுப்பினர்களின் எண்ணிக்கை இதே நிலையில்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் ஆளுங்கட்சியான தி.மு.க., தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னையை அடுத்த பனையூரில் நேற்று நடைபெற்றது. சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டம் நடைபெற்றதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், விஜய்யின் பேச்சும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டார். மேலும், அடுத்த மாதம் (ஆகஸ்டு) கட்சியின் 2-வது மாநாட்டினை நடத்துவது என்றும், செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அத்துடன், மேடையில் விஜய் பேசும்போது, மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடனும், மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வுடனும் கூட்டணி இல்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தார். மேலும், சுயநல அரசியல் லாபங்களுக்காக பா.ஜ.க.வுடன் கூடிக்குலாவி கூட்டணிக்கு செல்ல நாங்கள் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ இல்லை என்று அ.தி.மு.க.வையும் நேரடியாக தாக்கிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, இன்றைக்கு பேட்டியளித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வுடன் விஜய் கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சி என்பதுபோல் கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழக அரசியல் களத்தில் சட்டசபை தேர்தல் சமயத்தில், சதுரங்க விளையாட்டில் காய்கள் நகர்வதுபோல் அரசியல் சதுரங்கத்தில், கட்சிகள் கூட்டணி மாறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. இனி ஒவ்வொரு கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்பது? தெரியத் தொடங்கும்.
சட்டசபை தேர்தலுக்கான விஜய்யின் 'மாஸ்டர் பிளான்' இதுதான் என்பதை தீர்க்கமாக சொல்லிவிட்டார். ஆனால் அது எந்த வகையில் எடுபடப்போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.