கொள்ளை சம்பவம்: காவல்துறை நிர்வாகம் முற்றிலுமாக சீரழிந்து உள்ளது - அதிமுக குற்றச்சாட்டு

கோப்புப்படம்
குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவது, காவல்துறை நிர்வாகம் என்பது முற்றிலுமாக சீரழிந்து உள்ளதையே காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அதிமுக தலைமை கழகம் சார்பில் அதன் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் உள்ள காவல்துறை டி.ஜி.பி. அலுவலகத்தின் அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன. அதே போல, கோவையில் பெண் ஒருவரிடம் நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில் காவல்துறை டி.எஸ்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
காவல்துறை டி.ஜி.பி. அலுவலகம் அருகேயே துணிந்து கொள்ளையன் கைவரிசை காட்டியிருப்பது, முதல்-அமைச்சர் காவல்துறையை எந்த விதத்தில் நிர்வாகம் செய்கிறார் என்பதற்கு சாட்சி! முழுநேர டி.ஜி.பி. கூட இல்லாத ஒரு காவல்துறை மீது எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்?
வேலியே பயிரை மேய்ந்தாற்போல், POCSO வழக்கு முதல் கொள்ளை வரை காவல்துறையினர் மற்றும் அவர்களைச் சார்ந்தோரே குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவது, காவல்துறை நிர்வாகம் என்பது முற்றிலுமாக சீரழிந்து உள்ளதையே காட்டுகிறது.
காரணம்? இதைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இல்லாத வெற்று முதல்-அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின். தொலைந்த இரும்புக்கரத்தை நீங்கள் இனிமேல் கண்டுபிடித்து, துரு நீக்கி..... எந்தப் பயனும் இல்லை!. சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசை 2026-ல் புரட்சித் தமிழர் தலைமையில் வீட்டுக்கு அனுப்பி, #மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம் !
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






