விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் இருந்த நெல் கொள்முதலுக்கான ரூ.810 கோடி விடுவிப்பு


விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் இருந்த நெல் கொள்முதலுக்கான ரூ.810 கோடி விடுவிப்பு
x

டி.என்.சி.எஸ்.சி. ரூ.420 கோடியும், டி.என்.பி.ஆர்.பி.எப். நிறுவனம் ரூ.390 கோடியும் வழங்கி உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (டி.என்.சி.எஸ்.சி.) மற்றும் மத்திய அரசின் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்.சி.சி.எப்.) மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட நாட்களில் பணம் பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில், என்.சி.சி.எப். சார்பில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு 100 நாட்களுக்கு மேலாகியும் அதற்கான தொகை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், என்.சி.சி.எப். நிறுவனத்தின் கிளை மேலாளர் பெஜாய் டி.ஜான், தமிழ்நாடு நெல் மற்றும் அரிசி பதப்படுத்தும் கூட்டமைப்பு (டி.என்.பி.ஆர்.பி.எப்.) மேலாண் இயக்குனர் அம்ருதீன் ஷேக் தாவூத் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"மத்திய அரசின் அங்கீகாரம் பெற்று என்.சி.சி.எப். நிறுவனத்தின் இடைநிலை சார்பு நிறுவனமாக டி.என்.பி.ஆர்.பி.எப். நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டி.என்.பி.ஆர்.பி.எப். நிறுவனம் காவிரி டெல்டா அல்லாத மாவட்டங்களில் 40 ஆயிரத்து 490 விவசாயிகளிடம் 3 லட்சத்து 31 ஆயிரத்து 178 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது.

இதன் மதிப்பான ரூ.810 கோடி தொகையானது விவசாயிகளின் வங்கி கணக்கில் முழுவதுமாக வரவு வைக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகளின் இணையதள பதிவேட்டில் ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், டி.என்.சி.எஸ்.சி. ரூ.420 கோடியும், டி.என்.பி.ஆர்.பி.எப். நிறுவனம் ரூ.390 கோடியும் வழங்கி உள்ளது.

தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் நலனை காத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மற்றும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story