த.வெ.க.வில் இணைந்த பிறகு கோபி தொகுதிக்கு சென்ற செங்கோட்டையன் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

செங்கோட்டையனுக்கு த.வெ.க. நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு,
அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கோரிக்கை வைத்த நிலையில், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அவர், பிறகு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில், கோபிசெட்டிப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா அதிரடியாக ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை நேரில் சென்ற செங்கோட்டையன், விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து சென்னை பனையூரில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். மேலும் திருப்பூர் முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்பட செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் த.வெ.க.வில் இணைந்தனர்.
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையனுக்கு அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுவதாக விஜய் அறிவித்தார். இந்த நிலையில், த.வெ.க.வில் இணைந்த பிறகு செங்கோட்டையன் இன்று கோபி தொகுதிக்கு சென்றார். அங்கு திரண்டிருந்த ஏராளமான த.வெ.க. தொண்டர்கள் செங்கோட்டையனுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“மக்கள் சக்தியாக உருவெடுத்து வரும் விஜய் 2026 ஆம் ஆண்டில் தமிழக முதல்-அமைச்சராக அமரவிருப்பது உறுதி. தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியை உருவாக்க விஜய் புறப்பட்டிருக்கிறார். மக்களுக்கு புனித ஆட்சியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் துணிந்து அரசியலுக்கு வந்துள்ளார். அந்த வழியில் நானும் இணைந்து பயணிக்கிறேன்.
இரண்டு ஆட்சிகளையும் மக்கள் தள்ளுபடி செய்ய விரும்புகிறார்கள். மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நான் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். என் பின்னால் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானத்தை விலக்கி, மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார் விஜய். இது புனித ஆட்சிக்கான அவரது தீர்மானத்தை காட்டுகிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






