ஓ.பன்னீர்செல்வத்துடன் செங்கோட்டையன் சந்திப்பு...?

நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன் என செங்கோட்டையன் கூறினார்.
சென்னை,
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவிடுத்தார். இதைத்தொடர்ந்து அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள தன் இல்லத்தில், செங்கோட்டையன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக, தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, தினகரனின் அமமுக, மாவட்டச் செயலாளர்கள் சிலரிடமும் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று செங்கோட்டையன் சந்தித்து பேசியதாகவும் இந்த சந்திப்பானது சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது. இதற்கு செங்கோட்டையனும் மறுப்பு தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து கோபியில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “ சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை. ஒருங்கிணைப்பு குறித்து யாரிடமும் நான் பேசவில்லை. அதுபோன்ற செய்திகள் வந்தவுடன் பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு இதுகுறித்து விளக்கம் அளித்தேன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்” என கூறினார்.
இந்த நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நண்பர் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், சுமார் 2 மணி நேரம் ஓ.பன்னீர்செல்வம்-செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






