இரிடியம் மோசடியில் ஈடுபட்ட மோசடி கும்பல் மீதான தொடர் கைது நடவடிக்கை

இரிடியம் விற்பனை மூலமாக கோடிக் கணக்கில் பணம் என்ற வதந்திகளை நம்பி மக்கள் யாரிடமும் ஏமாற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய ரிசர்வ் வங்கியின் பேரில், போலியான ஆவணங்களை தயாரித்து முறையாக பதிவு செய்யாமல் டிரஸ்ட்கள் நடத்தி, இரிடியம் விற்பனை செய்வதால் வெளி நாடுகளிலிருந்து கோடிக் கணக்கில் பணம் வருவதாக பொய்யாக கூறி, தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு மோசடி கும்பல்கள் பொதுமக்களிடமிருந்து லட்ச கணக்கில் பணம் பெற்று, ஏமாற்றிவருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை தானாக முன்வந்து, தமிழ்நாடு முழுவதும் பல வழக்குகளை பதிவுசெய்து விசாரணை தொடங்கியது.
முதற் கட்டமாக 12.09.2025 ம் தேதி நடைபெற்ற சோதனை மற்றும் கைது நிகழ்வில் 13 வழக்குகளில் தொடர்புடைய 30 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழவதும் பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் அதிகமான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வழக்கு தொடர்பான தகவல்கள், ஆவணங்கள் பெறப்பட்டு, புலன் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
தற்போது 23.10.2025 மற்றும் 24.10.2025 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் 15 மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாக மாபெரும் சோதனை மற்றும் தேடுதல் படலம் நடைபெற்றது. குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறையைச் சேர்ந்த 8 காவல்துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில், 20 காவல் ஆய்வாளர்கள், 15 சார்பு ஆய்வாளர்கள் அடங்கிய குழு சோதனையில் ஈடுபட்டு கம்பத்தை சேர்ந்த சந்திரன், பெருமாநல்லூரை சேர்ந்த ராணி, முசிறி பகுதியை சேர்ந்த யுவராஜ், வருசநாடு பகுதியை சேர்ந்த பழனியம்மாள், நாகப்பட்டினத்தை சேர்ந்த ராஜசிவம் போன்ற 5 முக்கிய குற்றவாளிகளுடன் அவர்களது கூட்டாளிகள் என 27 குற்றவாளிகளை கைது செய்துள்ளது. குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றனர். புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி, இரிடியம் விற்பனை மூலமாக கோடிக் கணக்கில் வெளிநாட்டிலிருந்து பணம் கிடைக்கும் மற்றும் ஆர்.பி.ஐ மூலமாக பணம் கிடைக்கும் போன்ற வதந்திகளை நம்பி மக்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






