கோவில்பட்டியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கோவில்பட்டியில் 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த, கயத்தாறு பகுதியைச் சேர்ந்த வாலிபரை கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோவில்பட்டியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
Published on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் காளீஸ்வரன் (வயது 27) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று (7.11.2025) குற்றவாளி காளீஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் அமிர்தஜோதி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 25 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com