பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மூன்றாம் மொழியை கட்டாயமாக்குவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கோப்புப்படம்
உயர்கல்விக்கான மாநிலக் கல்விக் கொள்கையை திமுக அரசு இன்று வரை வெளியிடவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மும்மொழிகள் கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கி பல்கலைக்கழக மானியக் குழு ஆணையிட்டிருக்கிறது. எந்த ஒரு மொழியையும் மாணவர்கள் விரும்பிப் படிப்பதே சிறந்தது; அதற்கு மாறாக மூன்றாம் மொழியை கட்டாயப்படுத்தி திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலாளர் மனீஷ் ஜோஷி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மத்தியப் பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், அனைத்து பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் ஆகியவற்றில் இப்போது கற்பிக்கப்படும் இரு மொழிகளுடன் மூன்றாவதாக ஒரு மொழி கண்டிப்பாக கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முதல் மொழியாக உள்ளூர் மொழியும், இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் கற்பிக்கப்படும் நிலையில், மூன்றாம் மொழியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றிருக்கும் 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்றும் யு.ஜி.சி அறிவுறுத்தியுள்ளது. இந்த மொழிகளில் மாணவர்களின் புலமை அளவில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்; ஒவ்வொரு புலமை நிலைக்கும் ஏற்றவாறு மொழிப்பாடங்களுக்கு கிரெடிட் வழங்கப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில், 3 மொழிப்பாடங்களையும் குறிப்பிட்ட புலமை நிலையில் கற்றுத் தேறாவிட்டால் பட்டம் பெற முடியாது என்பதுதான். இதன் மூலம் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மூன்றாம் மொழியை யு.ஜி.சி கட்டாயமாக்கியுள்ளது.
மாணவர்கள் அவர்களால் இயன்ற வரையில் பிற மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் முதல் பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டு வரும் தேர்தல் அறிக்கைகளில், "தமிழ்நாட்டு மாணவர்கள் பிற மொழிகள் கற்க விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை அரசே செய்து கொடுக்கும். அதே போல உயர்கல்வி மாணவர்கள் வெளிநாட்டு மொழிகளை விருப்பத்தின் அடிப்படையில் கற்பதற்கான உதவிகள் செய்யப்படும்" என்று தொடர்ந்து உறுதி அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மாணவர்களின் விருப்பம் இல்லாமல் எந்தவொரு மொழியும் அவர்களின் மீது கட்டாயமாகத் திணிக்கப்படுவதை ஏற்க முடியாது என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு.
எந்த திட்டத்தையும் செயல்படுத்தும்போது அதனால் ஏற்படக்கூடிய பயன்கள், சாத்தியக் கூறுகள் ஆகியவை குறித்து ஆராயப்பட வேண்டும். வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்வதால் பயன் உண்டு; ஆனால், தாய்மொழி தவிர்த்த பிற உள்நாட்டு மொழிகளை கற்றுக் கொள்வது எந்த வகையான வேலைவாய்ப்புக்கும் பயனளிக்காது என்பது பல்வேறு காலக்கட்டங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது பயனற்ற மூன்றாம் மெழியை மாணவர்கள் மீது கட்டாயப்படுத்தி திணிப்பது தேவையற்றது.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இன்றைய நிலையில் மூன்றாம் மொழியை கற்பிப்பது சாத்தியம் இல்லை. தமிழகத்தின் அனைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிப்பாடங்களை கற்பிப்பதற்கே ஆசிரியர்கள் இல்லை. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அவர்களை நியமிக்க அரசு மறுத்து வருகிறது. இத்தகைய சூழலில் மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்றால் 10 துறைகள் கொண்ட ஒரு கல்லூரியில் குறைந்தது 4 முதல் 5 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அரசு உயர்கல்வி நிறுவனங்களால் அது சாத்தியமில்லை.
அதுமட்டுமின்றி, எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு கூறினாலும், தகுதியான ஆசிரியர்களின் இல்லாமை, அதிக வகுப்பறைகள் இல்லாத சூழலில் இயன்றவரை பெரும்பான்மையான மாணவர்களை ஒரே வகுப்புக்குள் கொண்டு வர வேண்டிய தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இந்தி மொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த வகையில் இது மறைமுகமான இந்தித் திணிப்பு தான்.
உலகம் முழுவதும் கல்விச் சூழலும், தகவல் தொழில்நுட்ப புரட்சியும் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் நிலையில், அதை எதிர்கொள்வதற்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் வகையில் தான் புதிய திட்டங்களை பல்கலைக்கழக மானியக்குழு அறிமுகம் செய்ய வேண்டும். அதை விடுத்து 60 ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களையே மீண்டும், மீண்டும் தூசு தட்டி முன்மொழிந்து கொண்டிருக்கக் கூடாது.
உயர்கல்வி நிறுவனங்களில் மூன்றாம் மொழியை கட்டாயமாக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கை மீது தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை திமுக அரசு தெளிவாக விளக்க வேண்டும். மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறி நாடமாடிக் கொண்டிருக்கும் திமுக அரசு, உயர்கல்வி நிறுவனங்களில் புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதற்கு வசதியாக, பள்ளிக்கல்விக்கான மாநிலக் கல்விக் கொள்கையை அரைகுறையாக வெளியிட்ட திமுக அரசு, உயர்கல்விக்கான மாநிலக் கல்விக் கொள்கையை இன்று வரை வெளியிடவில்லை. இத்தகைய பின்னணி கொண்ட திமுக அரசு, மூன்றாவது மொழியையும் கொல்லைப்புறமாக ஏற்கத் தயங்காது.
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படாது என்று தி.மு.க. அரசு உறுதியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






