டாஸ்மாக் ரெய்டு வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்


டாஸ்மாக் ரெய்டு வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்
x

டாஸ்மாக் முறைகேடு மூலம் ரூ.1,000 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது டாஸ்மாக் சார்பில் மூத்த வக்கீல் விக்ரம் சவுத்ரி, தமிழ்நாடு அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆகியோர் வாதிட்டனர். அவர்கள் தங்கள் வாதத்தில், ''அமலாக்கத் துறை எப்போதும் வெளிப்படையாக இருந்ததில்லை. வெளிப்படையாக இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் அமலாக்கத்துறை ஒளிந்து கொண்டுள்ளது. எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கருதுகிறது? எதற்காக சோதனை செய்கிறோம்? என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும்.

அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஆண்டு முறைகேடு கூறப்படும் நிலையில், தற்போது தான் ஞானம் வந்தது போல அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது ஏன்? இன்றைக்கு டாஸ்மாக் குறிவைக்கப்படுகிறது. நாளை ஒவ்வொரு துறையும் குறிவைக்கப்படும். விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகளை அடைத்து வைத்து நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பியது சரியான நடத்தையா?'' என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிப்பது தானே அரசின் நோக்கம்..? என்றனர். இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், "ஊழலை ஒழிப்பதுதான் அரசின் நோக்கம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதை மாநில அரசு கவனித்துக்கொள்ளும். அமலாக்கத்துறை அல்ல" என்றார்.

இவர்களது வாதத்தை தொடர்ந்து, அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு தனது வாதத்தை தொடங்கினார்.

அவர், ''மாநில காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. முறைகேடு நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத் துறை விசாரணை நடத்தலாம். டாஸ்மாக் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. அவர்களில் சிலர் லஞ்ச பணத்தைக் கொண்டு சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்தது. அதனால், திடீர் சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கினால் அதன் சங்கிலி என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டாமா? இதற்கும் உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? என தெரிந்துகொள்ள வேண்டாமா? இதற்காக தான் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளது. டெண்டர், மதுபான கொள்முதல் என அனைத்திலும் முறைகேடு நடந்துள்ளது. கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்பட்டதை மேற்பார்வையாளர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த முறைகேட்டை மறைக்க உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான அனைத்து ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் தான் பாதுகாத்து வைக்கப்படும் என்பதால் அங்கு சோதனை நடத்தப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் உள்ளது. அமலாக்கத்துறை குறிப்பிட்ட முறையில் தான் விசாரணை நடத்த வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது.

எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றாலும் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்களை மறைப்பதும் குற்றம் தான். சம்பந்தப்பட்ட நபர் ஊழல் தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டபட்டவராக இல்லை என்றாலும் சாட்சியாக அவரை சேர்க்கலாம் என்று அமலாக்கத்துறை சட்டம் கூறுகிறது" என்று வாதிட்டார்.

இவரது வாதம் நிறைவடையாதததால், இந்த வழக்கு நாளை (வியாழக்கிழமைக்கு) தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் டாஸ்மாக் மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பு வாதங்கள் முடிந்து விட்டதால், வருகிற 22-ந்தேதி எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1 More update

Next Story