கவர்னர் அதிகாரம் குறித்த சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு


கவர்னர் அதிகாரம் குறித்த சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
x

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் காலவரம்பு நிர்ணயம் செய்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, கவர்னர் பொறுப்பேற்ற ஆரம்ப நாளிலிருந்து, தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் தலையிட்டு, அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஆண்டுக் கணக்கில் கிடப்பில் போட்டு, மக்கள் நலன் பேணும் அரசின் நடவடிக்கைகளை முடங்கி வந்தார்.

கவர்னரின் ஒப்புதல் பெற, தமிழ்நாடு அரசு பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவர் ஒப்புதல் தர மறுத்து வந்ததால் தமிழ்நாடு அரசு சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டது. இதனை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்தது சட்டவிரோதமானது என்று அறிவித்து, கவர்னர் கிடப்பில் போட்டு, முடக்கி வைத்திருந்த மசோதாக்களுக்கு அனுமதி வழங்கியது.

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் காலவரம்பு நிர்ணயம் செய்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதி, அரசியல் அமைப்புச் சட்டத்தின் சில பிரிவுகள் வழங்கும் அதிகாரம் தொடர்பாக, சுப்ரீம்கோர்ட்டின் விளக்கம் கேட்டு 14 வினாக்களை அனுப்பி இருந்தார். ஜனாதிபதியின் வினாக்களுக்கு சுப்ரீம்கோர்ட்டு இன்று (20.11.2025) விளக்கம் அளித்துள்ளது.

கவர்னர், ஜனாதிபதி ஆகியோரின் அதிகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது எனினும், சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களை காலவரையற்ற முறையில் கிடப்பில் போட்டு தாமதிக்கும் போது, கோர்ட்டு தலையிட்டு, கால வரம்பு நிர்ணயம் செய்யும் என்பதை தெளிவு படுத்தியதுடன், அரசியல் சட்டம் பிரிவு 361 கவர்னர், ஜனாதிபதி ஆகியோர், தங்கள் கடமையை செய்வதில், கோர்ட்டுக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை என்று விலக்கு அளித்துள்ளது. எனினும், அரசியலமைப்பு செயலற்ற தன்மைக்கு தள்ளப்படும் போது, அதற்கு கவர்னர் பதவியை பயன்படுத்துவதை கோர்ட்டு அனுமதிக்காது.

சட்டப் பேரவை அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும், அல்லது அவைகளை நிராகரித்து மாநில அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். ஜனாதிபதிக்கு அனுப்பும் போது, அதற்கான முழுமையான விளக்கத்தை மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இவைகளை தாண்டிய அதிகாரம் கவர்னர்களுக்கு இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ள சுப்ரீம்கோர்ட்டு, மக்களால் தேர்வு செய்யப்படும் சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் இறுதி அதிகாரம் பெற்ற உச்ச அமைப்புகள் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது.

கவர்னர்கள் சட்ட மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் போதெல்லாம், ஜனாதிபதி, தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டின் விளக்கம் கேட்டு அணுகக்கூடாது என்ற தெளிவுபடுத்தி உள்ளது. சுப்ரீம்கோர்ட்டின் விளக்கம் மக்களாட்சியின் மாண்புகளையும், அதிகாரத்தையும் உயர்த்தி பிடித்து, பாதுகாத்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story