விஜய்யை கண்டு தமிழக அரசுக்கு எந்த பயமும் இல்லை: சபாநாயகர் அப்பாவு

கவர்னர் குறித்து தவறாகவும், உண்மைக்கு புறம்பாகவும் எந்த கருத்தும் நான் பேசவில்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
நெல்லை,
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மாநில சபாநாயகர்கள் மற்றும் துணை சபாநாயகர்கள் கூட்டமைப்பு சார்பில் பீகாரில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று தமிழக கவர்னர் 3 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் நடந்து கொண்டது தொடர்பாகவும், அவ்வாறு மாநிலங்களில் கவர்னர்கள் செயல்படக்கூடாது எனவும் வலியுறுத்தி பேசினேன்.
தமிழக அரசு சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானங்களுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுப்பது கிடையாது. எந்த முயற்சியும் எடுக்காமல் தீர்மானங்கள் குறித்து யோசிக்காமல், அதனை திருப்பி அனுப்பி விட்டு மீண்டும் அந்த தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தும் நிறைவேற்றாமல் இருந்து வருவது தொடர்பாகவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் பேசினேன்.
தமிழக அரசு கொண்டு வரும் எந்த சட்டத்தையும் நிறைவேற்றாமல் கவர்னர் கிடப்பில் போட்டதையும் தெளிவாக எடுத்துரைத்தேன். இதுகுறித்து பேச அனுமதி மறுத்ததுடன் உங்களது பேச்சு பதிவாகாது என ராஜ்யசபா துணை தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
கவர்னர் குறித்து தவறாகவும், உண்மைக்கு புறம்பாகவும் எந்த கருத்தும் நான் பேசவில்லை. ஆனால் அதனை துணை சபாநாயகர் பதிவு செய்ய மாட்டேன் என சொல்லியிருப்பது ஏற்புடையதல்ல. அவர் என்ன நோக்கத்திற்காக பதிவு செய்ய மாட்டேன் எனக்கூறினார் என்பதும் தெரியவில்லை. எனவே ஜனநாயக முறைப்படி எனது எதிர்ப்பை காட்டும் வகையில் வெளிநடப்பு செய்தேன்.
தம்பி ஞானசேகரன் ஒரு நிகழ்ச்சியில் சாதாரணமாக பேசியதை பெரிதுபடுத்தி வருகிறார்கள். நான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஞானசேகரன் என்ற நபர் எனக்கு சால்வை அணிவித்தார். அவரது பெயரை கேட்டு நகைச்சுவையாக அவரை மையப்படுத்தி பேசியதை சர்ச்சையாக்கி விட்டனர். வெட்டி ஒட்டி அந்த காணொலியை வெளிப்படுத்தி உள்ளனர். முழு காணொலியை பார்த்தால் அந்த விவகாரத்தின் உண்மை நிலை தெரியும்.
விஜய்யை கண்டு தமிழக அரசுக்கு எந்த பயமும் இல்லை. பரந்தூர் விமான நிலையம் அந்த பகுதியை விட்டு வேறு எங்கும் செல்லாது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.