கோவையில் கடத்தப்பட்ட சிறுவனை 3 மணி நேரத்தில் கேரளாவில் மீட்ட தமிழ்நாடு போலீஸ்

சிறுவனின் செல்போன் எண்ணை வைத்து அவனது இருப்பிடத்தை போலீசார் கண்டறிந்தனர்.
கோவை,
அசாம் மாநிலம் முரியாபரி மாவட்டம் முசினாபுரி பகுதியை சேர்ந்தவர் இம்ரான் என்ற அப்துல் ஹக்(வயது 29). இவருடைய மனைவி பர்பினா. இவர்களது மகன் ஹூமாயூன்(5). இவர்கள் கடந்த ஓராண்டாக கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஓரைக்கல்பாளையம் பகுதியில் தங்கியுள்ளனர். அத்துடன் அப்துல் ஹக், பர்பினா ஆகியோர் அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர்.
அதே தொழிற்சாலையில் அசாம் மாநிலம் குக்ரஜார் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது நண்பர்கள் 5 பேருடன் கடந்த 4 மாதங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தான். இவர்களை அசாம் மாநிலத்தில் இருந்து சொரிபுல் என்ற ஒப்பந்ததாரர் வேலைக்கு சேர்த்து விட்டதாக தெரிகிறது. அவரிடம், அந்த தொழிலாளர்களுக்கான சம்பளத்தை தொழிற்சாலை நிர்வாகத்தினர் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவர், அந்த தொழிலாளர்களிடம் சம்பளத்தை வழங்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது. இதனால் அந்த சிறுவன் உள்பட 6 பேரும் ஆத்திரத்தில் இருந்தனர். இதற்கிடையில் சொரிபுல்லிடம், அப்துல் ஹக் நட்பில் இருப்பது அந்த சிறுவனுக்கு தெரியவந்தது. இதனால் அவரது மகன் ஹூமாயூனை கடத்தி பணம் கேட்டு மிரட்ட அந்த சிறுவன் திட்டமிட்டான்.
அதன்படி ஹூமாயூனை பானிபூரி வாங்கி தருவதாக கூறி தொழிற்சாலையில் இருந்து வெளியே அழைத்து வந்தான். பின்னர் பஸ்சில் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு கடத்தி சென்றான். அவனுடன் உடந்தையாக அசாம் மாநிலத்தை சேர்ந்த நண்பர் அன்வோர் அலி(18) இருந்தார். பின்னர் செல்போன் மூலம் அப்துல் ஹக்கை தொடர்பு கொண்டு உங்களது மகனை கடத்தி வைத்துள்ளேன்,
அவன் உங்களுக்கு வேண்டுமென்றால் ரூ.1 லட்சம் முதல் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வரை பணம் தர வேண்டும் என்று மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை மிரட்டினான். இதுகுறித்து அப்துல் ஹக் அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையிலான போலீசார் அந்த சிறுவனின் செல்போன் எண்ணை வைத்து அவனது இருப்பிடத்தை கண்டறிந்தனர்.
பின்னர் கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு விரைந்து சென்று சுமார் 3 மணி நேரத்தில் ஹூமாயூனை மீட்டனர். மேலும் அந்த சிறுவன் மற்றும் அன்வோர் அலியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






