டாஸ்மாக் ஊழல்: ரூ.40 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் - எடப்பாடி பழனிசாமி சந்தேகம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சென்னை,
தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சரியாக, காலை 9.30 மணிக்கு சபாநாயகர் அப்பாவு திருக்குறள் வாசிக்க கூட்டம் தொடங்கியது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து ரூ.1,000 கோடி மதுபான ஊழல் தொடர்பாகவும், அமலாக்கத்துறை ரெய்டு தொடர்பாகவும் பேச முயன்றனர். சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில், 9.32 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையை தொடங்கினார். ஆனாலும், அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேச வாய்ப்பு கேட்டுக்கொண்டே இருந்தனர். இதனால், சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து பேச அ.தி.மு.க.வுக்கு வாய்ப்பு தரப்படாததால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், சட்டசபையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
கடந்த ஒரு வார காலமாக டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் இதர அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அமலாக்கத்துறை சோதனை அடிப்படையில் ரூ.1,000 கோடி அளவில் டாஸ்மாக் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சோதனை முழுமையடைந்தால் ரூ.40 ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்றது வெளிவரலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.