தாயார் பைக் வாங்கித் தர மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

தெற்கு கழுகுமலை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனக்கு புதிய மோட்டார் பைக் வாங்கித் தரும்படி தாயாருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், தெற்கு கழுகுமலை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரம் மகன் கார்த்திகேயன் (வயது 19), கூலி தொழிலாளி. சுந்தரம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கார்த்திகேயன் தனது தாயார் ராமலட்சுமி(38) மற்றும் தம்பி ஆறுமுகம்(15) ஆகியோருடன் தெற்கு கழுகுமலையில் வசித்து வந்தார். கார்த்திகேயனுக்கு மதுப்பழக்கம் இருந்ததால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தனக்கு புதிய மோட்டார் பைக் வாங்கித் தரும்படி தாயாருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். ஆனால் ஒழுங்காக வேலைக்கு செல்லுமாறு தாயார் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 22ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






