சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் தற்காலிக பஸ் நிலையம், வாகன நிறுத்தங்கள் அமைப்பு


சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் தற்காலிக பஸ் நிலையம், வாகன நிறுத்தங்கள் அமைப்பு
x

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் தற்காலிக பஸ் நிலையம், வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்றும், நாளையும் பொதுமக்கள், பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு 17 வாகன நிறுத்தங்கள் மற்றும் மழை அதிகமாக இருக்கும்பட்சத்தில் வீரபாண்டியன்பட்டினம்- காயல்பட்டினம் சாலையில் புனித ஜோசப் பள்ளி அருகில் சோயா லேண்டில் ஒரு அவசரகால வாகன நிறுத்தமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், அரசு சிறப்பு பஸ்களை நிறுத்துவதற்கு தற்காலிக பேருந்து நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அதாவது, தூத்துக்குடியில் இருந்து ஆறுமுகநோி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பஸ்கள் அனைத்தும் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஐ.டி.ஐ. வளாகத்தில் பக்தர்களை இறக்கிவிட்டு, அதே வழித்தடம் வழியாக திரும்பிச் செல்ல வேண்டும்.

பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு அருகில் செல்ல சுற்றுப்பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கீழரதவீதி, அமலிநகர் சந்திப்பில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பிச் செல்லும் போது தெற்கு ரதவீதி, முருகாமடம், மெயின் ஆர்ச் வழியாக தற்காலிக பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

நெல்லையில் இருந்து குரும்பூர் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பஸ்கள் அனைத்தும் நெல்லை ரோட்டில் ஷபி டிரேடர்ஸ் எதிர்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பி அதே வழித்தடத்தில் செல்ல வேண்டும்.

நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம், பரமன்குறிச்சி வழியாக வரும் அரசு சிறப்பு பஸ்கள் அனைத்தும் மற்றும் குமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக வரும் பஸ்கள் அனைத்தும் பரமன்குறிச்சி சாலையில் உள்ள எப்.சி.ஐ. குடோனுக்கு மேற்கு பகுதியில் (சர்வோதயா அருகில்) அமைந்துள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தி, அதே வழித்தடத்தில் திரும்பிச் செல்ல வேண்டும்.

நெல்லையில் இருந்து குரும்பூர் வழியாக திருச்செந்தூருக்கு வரும் தனியார் வாகனங்கள், வியாபாரிகள் சங்கம் (ஷபி டிரேடர்ஸ் எதிர்புறம்), அன்புநகர் (குமாரபுரம்), குமரன் ஸ்கேன் சென்டர் எதிர்புறம், குமாரபுரம், ஆதித்தனார் குடியிருப்பு, அருள்முருகன் நகர், கிருஷ்ணாநகர் ஆகிய இடங்களில் வாகனத்தை நிறுத்தலாம். திரும்பிச் செல்லும் போது அதே வழித்தடத்தில் குரும்பூர் சாலை வழியாக செல்ல வேண்டும்.

நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் மார்க்கமாக பரமன்குறிச்சி வழியாக வரும் வாகனங்கள் எப்.சி.ஐ. குடோன் அருகில் உள்ள பால்பாயாசம் அய்யர் லேண்ட், சுந்தர் லேண்ட், செந்தில்குமரன் பள்ளி வளாகம் ஆகிய 3 இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

1 More update

Next Story