‘இந்தியா' கூட்டணி வலிமையாக இருக்கிறது - செல்வப்பெருந்தகை

திமுக தரப்பில் தொகுதி பங்கீடு குழு அமைக்கப்பட்டதும் பேச்சுவார்த்தை தொடங்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு சந்தித்தது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளது.
இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன் அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம். .திமுக தரப்பில் தொகுதி பங்கீடு குழு அமைக்கப்பட்டதும் பேச்சுவார்த்தை தொடங்கும்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி கூட்டணி. தொகுதி பங்கீடு குறித்து பிறகு தெரிவிக்கிறோம். இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைபாட்டில் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






