பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்க திட்டம்

போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை,
சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படும், போரூர் - வடபழனி வரையிலான 7 கி.மீ., வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. பூந்தமல்லி- போரூர் வரையிலான 10 கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில் போரூர்- வடபழனி இடையே இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.
7 கி.மீ வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்தது. இது சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பால வழித்தடமாகும். இதில் கீழ் அடுக்கில் வாகனங்களும், மேல் அடுக்கில் மெட்ரோ ரெயில்களும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரெயில் சேவையை பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்க சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் 25 நிமிடங்களில் பூந்தமல்லி பைபாஸில் இருந்து வடபழனி சென்றடையலாம். 7 நிமிடத்தில் ஒரு ரெயில் என்ற வீதத்தில் சேவை இருக்கும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஜூன் மாதத்தில் கோடம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, மதுரை மெட்ரோ திட்டம் ஏன் தேவைப்படுகிறது என்பதற்கு விளக்கம் அளிக்கக்கூடிய வகையிலான அறிக்கை முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது; அந்தத் திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பும். நிலம் கையகப்படுத்த ஆய்வு செய்யக்கூடிய பணிகள் நிறுத்தப்படவில்லை; மதுரைக்கு ஏற்கனவே முடிந்து விட்டது இன்னும் ஒரு வாரத்தில் கோவைக்கும் முடிந்து விடும் என்று சென்னை மெட்ரோ ரெயில் மேலாண் இயக்குநர் சித்திக் கூறினார்.






