'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்காததற்கு மூலக் காரணம் தி.மு.க. தான் - ஓ.பன்னீர்செல்வம்

கோப்புப்படம்
ஆசிரியர்கள் கைது அடக்குமுறையின் உச்சகட்டம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கச்சத்தீவு தாரைவார்ப்பு, காவிரி நதிநீர் பங்கீடுப் பிரச்சினை, வரிப் பகிர்வு குறைவு, பொதுப் பட்டியலில் கல்வி, நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு, மருத்துவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்காமை என பலவற்றிற்கு மூலக் காரணம் தி.மு.க. தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வரிசையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு சம ஊதியம்'வழங்காததற்கும் மூலக் காரணம் தி.மு.க. தான்.
தி.மு.க. ஆட்சியின் பதவிக் காலமே முடிவுக்கு வருகிற சூழ்நிலையில், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினை உணர்ந்து, அவர்களை அழைத்துப் பேசி, அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், அவர்கள் மீது கைது நடவடிக்கையினை மேற்கொண்டு இருப்பது அடக்குமுறையின் உச்சகட்டம். வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை கடமையாக கருதாமல், காவல் துறை மூலம் அவர்களை ஒடுக்க நினைப்பது முறையற்ற செயல். ஒரு வேளை இதற்கு பெயர்தான் திராவிட மாடல் போலும்.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினைக் கருத்தில் கொண்டும், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியினை நினைவில் கொண்டும், 'சம வேலைக்கு சம ஊதியம்' என்பது அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமை என்பதை முதல்-அமைச்சர் கருத்தில் கொண்டும், இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






