தவெக கூட்டத்திற்கு வருவோருக்கு உணவு வழங்கும் திட்டம் இல்லை; செங்கோட்டையன்

காலை 8 மணி முதல் பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வரலாம். கியூ ஆர் கோடு, பாஸ் தேவையில்லை என்று செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு,
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். கரூர் சம்பவத்துக்கு பின்னர், தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டமாக ஈரோடு மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. 10 ஆயிரம் தொண்டர்கள், 25 ஆயிரம் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. 60 ஏக்கரில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தம், 20 ஏக்கரில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தம் என வாகன நிறுத்தத்துக்காக மட்டும் 80 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டுள்ளது.
நாளை பகல் 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொள்கிறார்.முன்னதாக சென்னையில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார். அங்கு பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பேசுகிறார். இதை முன்னிட்டு கடந்த 2 நாட்களாகவே பொதுக்கூட்ட மைதானத்தை தேடி தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அதிக அளவில் வருகிறார்கள்.
பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தை ஆய்வு செய்த பிறகு கேஏ செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தவெக கூட்டத்திற்கு வருவோருக்கு உணவு வழங்கும் திட்டம் இல்லை. காவல்துறை நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி உள்ளது. தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும். காலை 8 மணி முதல் பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வரலாம். கியூ ஆர் கோடு, பாஸ் தேவையில்லை” என்றார்.






