தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை கொச்சைப்படுத்துகின்றனர் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு

அவதூறு அறிக்கைகைளைத் தவிர்த்து மாநிலத்தின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை,
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எதிர்க்கட்சி வரிசையிலே உள்ள பலருக்கும் தங்களால் நிகழ்ந்த எந்த சாதனையையும் சொல்லிக் கொள்ள முடியவில்லை என்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அடைந்து வரும் உன்னத வளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அவதூறு அறிக்கைகைளைத் தவிர்த்து மாநிலத்தின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை கொச்சைப்படுத்துவதுடன் தமிழ்நாட்டின் நலனையும் புறக்கணிக்கின்றனர். மத்திய அரசின் தரவுகளின் படி, இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக தமிழ்நாடு அடையாளம் காணப்பட்டுள்ளது. அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ள மொத்த தொகையும் முதல் நாளிலேயே முதலீட்டாளர்களால் செலவிடப்படும் என நினைப்பது குழந்தைத்தனமானது.
2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.11.4 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 34 லட்சம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தொழில் முதலீடு குறித்து திமுக அரசு பொய்யான தகவல் தருவதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்திருந்த நிலையில், அமைச்சர் டிஆர்பி ராஜா இந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.






