எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை: திருமாவளவன் விளக்கம்


எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை: திருமாவளவன் விளக்கம்
x
தினத்தந்தி 9 Aug 2025 6:55 PM IST (Updated: 10 Aug 2025 9:40 AM IST)
t-max-icont-min-icon

எம்ஜிஆர் மீதும், ஜெயலலிதா மீதும் எனக்கு அதீதமான மதிப்பு உண்டு என்று திருமாவளவன் கூறினார்.

செம்பட்டு,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசியல் கடந்த 60 ஆண்டுகளாக எவ்வாறு இயங்கி வருகிறது. அது எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற உரையில் எம்.ஜி.ஆர். பற்றியும் குறிப்பிட்டேன். எம்.ஜி.ஆர். மீதும், ஜெயலலிதா மீதும் எனக்கு அதீதமான மதிப்பு உண்டு. அவர்களை பலமுறை மனம் திறந்து பாராட்டியுள்ளேன்.

தமிழ்நாடு அரசியல் எப்படி கருணாநிதி எதிர்ப்பு அரசியலாக மாறியது என அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் நான் பேசினேன். எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. எம்.ஜி.ஆரை ஒரு சாதிக்குள் நான் சுருக்கவில்லை. தவறாக அது புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. இயங்கியது. அது கருணாநிதி எதிர்ப்பை மையப்படுத்தி இயங்கியதாக நான் கூறினேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் சாதி எல்லைகளை கடந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

மிகப்பெரிய கூட்டணி அமைக்க வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆசையாகவும், அவருடைய முயற்சியாகவும் உள்ளது. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. கருத்து வேறுபாடுகள் இருக்கும், ஆனால் அது கூட்டணி உறவை சிதைக்கும் அளவு இருக்குமா? என்பது தெரியவில்லை. தி.மு.க. கூட்டணியில் கருத்து வேறுபாடு உள்ளது என எந்த பொருளில் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் என்பதை அவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story