தூத்துக்குடி: சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது; 12 பேர் சிறையில் அடைப்பு


தூத்துக்குடி: சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது; 12 பேர் சிறையில் அடைப்பு
x

அறவழியில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட பொட்டலூரணி மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பச்சைத் தமிழகம் தலைமைப் பணியாளர் சுப.உதயகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பொட்டலூரணி கிராமம் உள்ளது. இந்த பொட்டலூரணி விலக்கில் அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல வேண்டும், பொட்டலூரணி அருகே செயல்பட்டு வரும் மீன் கழிவு அரவை ஆலைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பொட்டலூரணி கிராம மக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 22ம் தேதி காலை முதல் பொட்டலூரணி கிராம மக்கள் நெல்லை-தூத்துக்குடி ரோட்டில் பொட்டலூரணி விலக்கில் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை-தூத்துக்குடி மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 65 பெண்கள் உள்பட 120 பேரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தில் சிலர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சங்கரநாராயணன் (வயது 51), சண்முகம்(34), தெய்வானை ஈசுவரராமன்(36), கருப்பசாமி(47) ஆகியோர் மீது 2 வழக்குகளும், ராமகிருஷ்ணன்(25), ஆறுமுக வெங்கடநாராயணன்(38), ராமசாமி(28), பாபு(38), ஈசுவரமூர்த்தி(32), முத்து கருப்பசாமி(38), முத்துராமன்(28), சுடலைமுத்து(37), எஸ்தர் அந்தோணிராஜ்(42) ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குகளையும் பதிவு செய்து, கைது செய்தனர்.

பின்னர் கைதான 13 பேரையும் போலீசார், தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நீதிபதி விஜய் ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதில் ராமகிருஷ்ணன் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 12 பேரும் 6.11.2025 வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அறவழியில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட பொட்டலூரணி மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பச்சைத் தமிழகம் தலைமைப் பணியாளர் சுப.உதயகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தங்களுடைய வாழ்வுரிமைகளை, வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்காக 500 நாட்களைத் தாண்டி அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி மக்களைக் கைது செய்து, அவர்களின் தலைவர் சங்கரநாராயணனை தனியாக அடைத்து வைத்திருக்கும் காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

போராடும் மக்களின் முக்கியமான கோரிக்கையான தனியார் மீன் அரவை ஆலைகளை உடனடியாக மூட வேண்டும். சாலைப் போக்குவரத்து தொடர்பான அவர்களின் கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும். அமைதியாக அறவழியில் போராடும் மக்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story