விஜய்யை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம்: செங்கோட்டையன்

விஜய்யை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என்று செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு,
ஈரோட்டில் த.வெ.க. சார்பில் விஜய் பிரசார கூட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில் பிரசார கூட்டம் 18-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 19 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தவெக தலைவர் விஜய் வருகிற 18-ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருகிறார். ஈரோட்டில் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை என்ற இடத்தில் விஜய் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் பிரசாரம் நடைபெறும். ஏற்பாடுகளை நாங்கள் தீவிரமாக செய்து வருகிறோம். கூட்டம் நடத்த எந்தத் தடையும் இல்லை.
நான் விருப்பப்பட்டு இந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கிறேன். கடுமையாக உழைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். தவெக தலைவர் விஜய்யை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம். யாரை கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விஜய் முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.






