சென்னையில் மின்சாரம் பாய்ந்து இன்று ஒரே நாளில் 3 பேர் பலி


சென்னையில் மின்சாரம் பாய்ந்து இன்று ஒரே நாளில் 3 பேர் பலி
x

சென்னையில் பிராட்வே, வேளச்சேரி மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் இன்று மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலியாகி உள்ளனர்.

சென்னை,

சென்னையில் பெஞ்சல் புயல் எதிரொலியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கி வருகிறது. நிவாரண பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் விஜயநகர் 2-வது தெருவில் புயல் மற்றும் மழை எதிரொலியாக, மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில் அந்த வழியே நடந்து சென்ற சக்திவேல் (வயது 45) என்பவர் மீது அந்த கம்பி விழுந்துள்ளது. இதில், அவர் உயிரிழந்து உள்ளார்.

இதுபற்றி அறிந்ததும் உடனிருந்தவர்கள் உடனடியாக அவருடைய உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிராட்வே பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவர் இன்று காலையில், ஏ.டி.எம். மையத்துக்கு சென்றபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிலையில், வேளச்சேரியில் மற்றொரு நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து உள்ளார்.

இந்நிலையில், சென்னை வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் இசைவாணன் என்பவர் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்து உள்ளார். சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்ததில் அவர் உயிரிழந்து உள்ளார். கொளத்தூரை சேர்ந்த அவர், 50 எச்.பி. மோட்டாரை இயக்கியபோது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

அவருடைய உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது. இதனால், சென்னையில் மின்சாரம் பாய்ந்து இன்று ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர்.


Next Story